கோலியின் சதத்தை முறியடித்த பட்லரின் அதிரடிச் சதம்: ஆர்சிபிக்கு 4-வது தோல்வி!

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார்.
கோலியின் சதத்தை முறியடித்த பட்லரின் அதிரடிச் சதம்: ஆர்சிபிக்கு 4-வது தோல்வி!
ANI

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் 19-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி தொடக்கம் முதலே சற்று வேகமாக ரன் குவிக்கத் தொடங்கினார்கள். போல்ட், பர்கர் ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இவர்கள், 4 ஓவர்களில் 42 ரன்கள் விளாசினார்கள்.

பவர்பிளேயில் பந்துவீசிய அஸ்வின் 3 ரன்கள் மட்டும் கொடுத்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். 6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 53 ரன்கள் எடுத்தது. விக்கெட்டுகளை இழக்காதபோதிலும், இருவரும் பெரிய அதிரடியைக் காட்டவில்லை. 10 ஓவர்கள் முடிவில் 88 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.

முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தார்கள். கோலி படிப்படியாக ஸ்டிரைக் ரேட்டை உயர்த்தினாலும், டு பிளெஸ்ஸி தடுமாறத் தொடங்கினார். 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த அவர் சஹால் சுழலில் ஆட்டமிழந்தார்.

அதிரடிக்கு சரியான அடித்தளம் இருந்தபோதிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னுக்கு பர்கர் பந்தில் போல்டானார். 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 129 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, கோலி ஆட்டத்தைக் கையிலெடுக்கத் தொடங்கி அவேஷ் கான் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.

அதேசமயம், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களும் கடைசி கட்டத்தில் மிகக் கச்சிதமாகப் பந்துவீசினார்கள். 17-வது ஓவரை வீசிய அஸ்வின் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்களை மட்டுமே கொடுத்தார். அடுத்து வீசிய சஹாலும் ஒரு சிக்ஸர் உள்பட 11 ரன்களை மட்டுமே கொடுத்தார். 19-வது ஓவரை வீசிய பர்கர் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

இதே ஓவரில் விராட் கோலி 67-வது பந்தில் சதத்தை எட்டினார். அவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் கோலி 3 பவுண்டரிகளை அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார்.

184 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே ஜெயிஸ்வாலை (0) இழந்தது. ஆனால், பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் பதற்றம் இல்லாமல் இன்னிங்ஸை கட்டமைத்தார்கள்.

முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். மயங்க் தாகர் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் பட்லர் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைக்க 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 54 ரன்கள் எடுத்தது.

இந்த அதிரடிக்குப் பிறகு இருவரும் ஆட்டத்தைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். சீரான வேகத்தில் ரன் உயர்ந்ததால், 10 ஓவர்கள் முடிவில் 95 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். ஃபார்ம் இல்லாமல் திணறி வந்த பட்லர் 30-வது பந்தில் அரை சதத்தை எட்டினார்.

சஞ்சு சாம்சனும் அதிரடிக்கு மாற ராஜஸ்தானின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 9-க்கு கீழ் குறையத் தொடங்கியது. சஞ்சு சாம்சன் 32-வது பந்தில் அரை சதத்தை எட்டினார்.

இவர்களுடைய அதிரடியால் கடைசி 36 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. இந்த நேரத்தில் மீண்டும் சிராஜ் அறிமுகம் செய்யப்பட்டார். இவருடைய ஷார்ட் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று டீப் ஃபைன் லெக்கில் கேட்ச் ஆனார் சஞ்சு சாம்சன். இவர் 42 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அடுத்த இரு ஓவர்களில் ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் ஆட்டமிழந்தார்கள்.

வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவாக இருந்ததால், அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தபோதிலும், ஆர்சிபியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இவர்களுடைய ஃபீல்டிங்கும் ஒரு காரணம்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட, முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தது மட்டுமில்லாமல், 57-வது பந்தில் சதத்தையும் எட்டினார் பட்லர்.

19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் 4 ஆட்டங்களில் 4-வது வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. பட்லர் ஃபார்முக்கு திரும்பிவிட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜொலித்த ஜெயிஸ்வாலும், ஜுரெல்லும் ஃபார்முக்கு வந்துவிட்டால், ராஜஸ்தான் பேட்டிங் அசுர பலமாகிவிடும்.

விளையாடிய 5 ஆட்டங்களில் 4-வது தோல்வியைச் சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது ஆர்சிபி. கோலியின் ரன்கள் மட்டும் பெங்களூருவுக்குக் கைகொடுப்பதில்லை. மற்ற பேட்டர்கள் உதவினால், கோலியின் ஸ்டிரைக் ரேட்டும் உயரும், ஆர்சிபிக்கான வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in