465 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: 3-வது நாள் முடிவில் இந்தியா முன்னிலை!

இந்தியாவுக்கு வெளியே பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது 12-வது முறை.
465 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: 3-வது நாள் முடிவில் இந்தியா முன்னிலை!
ANI
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து 96 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடித்து விளையாடி வந்த ஆலி போப் 106 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா வேகத்தில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய இந்தியப் பந்துவீச்சாளர்களின் திட்டத்தைத் தகர்த்தார். விக்கெட் கிடைக்காமல் நன்றாகப் பந்துவீசி வந்த முஹமது சிராஜ் முதல் விக்கெட்டாக பென் ஸ்டோக்ஸை 20 ரன்களுக்கு வீழ்த்தினார். புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இணை சிறப்பாகக் கூட்டணி அமைத்து விளையாடியது.

ஆடுகளத்தில் பெரிய உதவி கிடைக்காததால், ஷார்ட் பந்து உத்தியை இந்தியா கையாண்டது. முதலில் ஜேமி ஸ்மித் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய ஹாரி புரூக் 99 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணாவின் ஷார்ட் பந்தை மடக்கி விளையாடப் பார்த்து ஆட்டமிழந்தார். 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்ட விரக்தியில் வெளியேறினார் புரூக். 398 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

இருந்தபோதிலும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிரைடன் கார்ஸ் இணை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குத் தொல்லை கொடுத்தது. இருவரும் அதிரடியாக விளையாடி இந்திய அணி ரன்னை நெருங்கினார்கள். பிரைடன் கார்ஸ் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

தேநீர் இடைவேளை நெருங்குவதை உணர்ந்து, பும்ரா பந்துவீச வந்தார். 40 ரன்கள் எடுத்து விளையாடி வந்த வோக்ஸை போல்ட் செய்தார். ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்ததால், தேநீர் இடைவேளையை நடுவர்கள் சற்று தள்ளிப்போட்டார்கள். தனது 5-வது விக்கெட்டாக ஜாஷ் டங்கையும் பும்ரா போல்ட் செய்தார். இந்தியாவுக்கு வெளியே பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 12-வது முறை. தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஜெயிஸ்வால் இம்முறை 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் டெஸ்டில் முதல் ரன்னை எடுத்து கேஎல் ராகுலுடன் நல்ல கூட்டணியை அமைத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 66 ரன்கள் சேர்த்தபோது, பென் ஸ்டோக்ஸின் அற்புதமான திட்டத்தில் சாய் சுதர்சன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் 24-வது ஓவர் வீசும்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தடைபட்டது. மூன்றாவது நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேஎல் ராகுல் 47 ரன்களுடனும் ஷுப்மன் கில் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

ஆட்டம் சமநிலையில் இருப்பதால், கடைசி இரு நாள்களில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in