
இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியை அறிவித்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்யும் இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மும்பையில் இன்று வெளியிட்டார். ஷுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
"அனைத்து வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். கடந்த ஓராண்டாக பல்வேறு தருணங்களில் ஷுப்மன் கில்லைக் கவனித்துள்ளோம். ஓய்வறையிலிருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இளம் வீரர் என்றாலும், அவரிடம் நிறைய முன்னேற்றங்கள் இருந்துள்ளன. அவர் தான் சரியானவர் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் அற்புதமான வீரர். அவருக்கு வாழ்த்துகள்.
ஓரிரு பயணங்களுக்காக கேப்டன்களை தேர்வு செய்யக் கூடாது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக அவரிடம் முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்" என்றார் அகர்கர்.
முஹமது ஷமி இல்லாதது, கருண் நாயர் சேர்க்கப்பட்டது, பும்ரா 5 டெஸ்டிலும் விளையாடுவாரா எனப் பல்வேறு அம்சங்கள் குறித்தும் அகர்கர் விளக்கினார்.
அஜித் அகர்கர் கூறியதாவது
"முஹமது ஷமியின் உடற்தகுதியில் கடந்த வாரம் பின்னடைவு ஏற்பட்டது. எம்ஆர்ஐ செய்து பார்க்கப்பட்டது. அவரால் 5 டெஸ்டுகள் விளையாட முடியாது. அவர் தொடரிலிருந்து விலக நேரிடும் என மருத்துவக் குழுவினர் கூறினார்கள். அவர் முழு உடற்தகுதியில் இல்லையெனில், அவருக்காகக் காத்திருக்காமல் முழு உடற்தகுதியுடன் உள்ள வீரர்களைத் தேர்வு செய்யலாம் எனத் தேர்வு செய்தோம்.
தொடக்க பேட்டர்கள் யார் என்பதை தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஷுப்மன் கில் இங்கிலாந்து சென்றவுடன் முடிவு செய்வார்கள்.
பும்ரா 5 டெஸ்டுகளிலும் விளையாடுவாரா என்பது தெரியாது. டெஸ்ட் தொடர் எப்படி செல்கிறது, பும்ராவின் உடற்தகுதியைப் பொறுத்து 3 அல்லது 4 டெஸ்டுகளில் விளையாடுவாரா என்பது தெரிய வரும். 3-4 டெஸ்டுகளில் விளையாட முழு உடற்தகுதியுடன் இருந்தாலே, அவர் நமக்கான சொத்தாக இருப்பார். அணியில் அவர் இடம்பெற்றுள்ளார் என்பதே மகிழ்ச்சியானது" என்றார்.
துணை கேப்டன் பொறுப்பு பும்ராவுக்குச் செல்லாதது குறித்து பேசுகையில், "வீரராக அவர் மிகவும் முக்கியமானவர். அவரிடம் பேசினோம். அவருக்கும் இதில் பிரச்னையில்லை. அவருடைய உடல்நிலை குறித்தும் அவருக்குத் தெரிகிறது. கேஎல் ராகுல் முன்பு தான் கேப்டன் பொறுப்பை வகித்திருந்தார். அவர் தரமான வீரர். அவருக்குப் பெரிய தொடராக இது அமையும் என நம்புகிறோம்" என்றார்.
"சில நேரங்களில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். சர்ஃபராஸ் கான் முதல் டெஸ்டில் சதமடித்தது தெரியும். அதன்பிறகு, அவர் ரன் எடுக்கவில்லை. சில சமயம் அணி நிர்வாகம் இதுமாதிரியான முடிவுகளை எடுக்கும். தற்போதைய நிலையில், உள்நாட்டு கிரிக்கெட்டில் கருண் நாயர் நிறைய ரன்களை குவித்துள்ளார், டெஸ்டில் விளையாடிய அனுபவம் உள்ளது, கவுன்டி கிரிக்கெட்டிலும் விளையாடியிருக்கிறார். விராட் கோலி இல்லாதபோது, அணியில் அனுபவம் இல்லை என்பது தெரிகிறது. இவருடைய அனுபவம் அணிக்கு உதவும் என நினைத்தோம்.
அர்ஷ்தீப் சிங் தரமான பந்துவீச்சாளர். இவர் கவுன்டியிலும் விளையாடியுள்ளார். கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். பும்ரா 5 டெஸ்டுகளிலும் விளையாடப் போவதில்லை எனும்போது, அணியில் ஒரு மாறுபாடு தேவைப்படுகிறது.
ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் அற்புதமாக விளையாடினார். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நன்றாக விளையாடினார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இடமில்லை. ஷார்துல் தாக்குர் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர். அணியில் சமநிலையை உண்டாக்க இவரைப் போன்ற வீரர் தேவை. இந்தியா ஏ அணியுடனும் இவர் பயணிக்கிறார். நிதிஷ் குமார் ரெட்டி தற்போது பேட்டிங் ஆல்-ரவுண்டராக உள்ளார். பந்துவீச்சிலும் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்" என்றார் அஜித் அகர்கர்.
இந்த அணியில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் என இரு தமிழக வீரர்கள் உள்ளார்கள். சுழற்பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளார்கள். அக்ஷர் படேல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவில்லை. பார்டர்-காவஸ்கர் தொடரில் இடம்பெற்றிருந்தவர்களில் சர்ஃபராஸ் கான், ஹர்ஷித் ராணா ஆகியோர் இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்படவில்லை.