முதல் நாள் கடைசி பந்தில் கவாஜா அவுட்: பும்ரா மிரட்டல்!

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் நாள் கடைசி பந்தில் கவாஜா அவுட்: பும்ரா மிரட்டல்!
ANI
2 min read

சிட்னி டெஸ்ட் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.

பிஜிடி தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் எதிர்பார்த்தபடி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்குப் பதில் ஷுப்மன் கில், காயம் காரணமாக விலகிய ஆகாஷ் தீப் பதில் பிரசித் கிருஷ்ணா விளையாடுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே அறிவித்தபடி ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு பதில் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்க பேட்டர்கள் கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெயிஸ்வால் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி கூட்டணி அமைத்தார்கள். முதல் பந்திலேயே கோலியின் கேட்சை சரியாக பிடித்ததாக ஆஸ்திரேலியா கருத, மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார். இருவரும் உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்து விளையாடியிருக்கக்கூடும். ஆனால், உணவு இடைவேளைக்கு முந்தையக் கடைசி ஓவரில் நேதன் லயன் பந்தை இறங்கி வந்து விளையாட முயன்று ஸ்லிப்பிடம் 20 ரன்களுக்கு கேட்ச் ஆனார் கில். உணவு இடைவேளையில் 25 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ரிஷப் பந்த் களத்தில் இருந்தும் ரன் உயரவில்லை. ஓவருக்கு 2-க்கும் குறைவான ரன் ரேட்டிலேயே இந்தியா விளையாடி வந்தது. 68 பந்துகள் வரை களத்தில் கடுமையாகப் போராடி தாக்குப்பிடித்த விராட் கோலி, 69-வது பந்தில் ஸ்டம்புகளுக்கு வெளியே வந்ததைத் தொட்டு மீண்டும் வழக்கமான பாணியில் ஆட்டமிழந்தார்.

கோலி விக்கெட்டுக்கு பிறகு ரிஷப் பந்த் உடலில் நிறைய அடி வாங்கி களத்தில் தாக்குப்பிடித்தார். ஜடேஜாவின் இரு கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலியா தவறவிட்டது. இதனால், ரன் உயரவில்லை. இரண்டாம் பகுதி ஆட்டம் முடிவடைவதற்கு சற்று முன்னதாக ரிஷப் பந்த் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி மற்றும் ஜடேஜா ஒரு பவுண்டரி அடிக்க இந்திய அணி 100 ரன்களை கடந்தது. தேநீர் இடைவேளையில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, போலண்ட் மீண்டும் பந்துவீச வந்தார். 40 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பந்த் மடக்கி அடிக்கப் பார்த்து கம்மின்ஸிடம் கேட்ச் ஆனார். மெல்போர்ன் டெஸ்டில் சதமடித்த நிதிஷ் ரெட்டி இந்த முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சற்று தாக்குப்பிடித்து கூட்டணி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் குறுகிய இடைவெளியில் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் பும்ரா மட்டும் கடைசி கட்டத்தில் பவுண்டரிகள், சிக்ஸர் அடித்து ரன்களை உயர்த்தினார். 22 ரன்கள் எடுத்த பும்ரா கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போலண்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 72.2 ஓவர்கள் மட்டுமே இந்தியா பேட் செய்திருந்தாலும், முதல் நாள் ஆட்டம் முடிவடைய 15 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

பும்ரா வீசிய முதல் பந்தை சாம் கோன்ஸ்டஸ் கிரீஸிலிருந்து வெளியே இறங்கி வந்து பவுண்டரி அடித்தார். எனினும், இந்தத் தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கோன்ஸ்டஸால் தொடர முடியவில்லை. முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் பும்ராவிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார் கோன்ஸ்டஸ். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கவாஜா ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்து 176 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in