
ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக இரு டெஸ்டுகளுக்கு மேல் விளையாடக் கூடாது என நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பிஜிடி தொடரில் சிட்னி டெஸ்டின்போது காயம் காரணமாக பாதியில் விலகினார். பேட்டிங் செய்ய மட்டுமே அவர் களமிறங்கினார். இந்தக் காயத்திலிருந்து குணமடையாத பும்ரா சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் சேர்க்கப்படவில்லை.
இவருடையக் காயம் குறித்து நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்டி ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோவிடம் கூறுகையில், "பும்ரா குணமடைந்துவிடுவார். ஆனால், அவருக்கான பணிச்சுமை தான் இங்கு பிரச்னை. ஐபிஎல் போட்டியிலிருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு மாறுவது தான் அபாயகரமானது.
டி20யிலிருந்து டெஸ்டுக்கு மாறும்போது அது எப்போதுமே சவாலானது தான். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும்போது, அதிலிருந்து டெஸ்டுக்கு மாறுவது அந்தளவுக்கு மோசம் கிடையாது. காரணம், வாரத்துக்கு மூன்று நாள்கள் விளையாட நேரிடும். இடையில், பயிற்சி இருக்கும். இதன்மூலம், ஏறத்தாழ 40 ஓவர்கள் வீச நேரிடும். டெஸ்டில் விளையாடும்போது ஒரு வாரத்தில் எதிர்கொள்ளும் பணிச்சுமைக்கு நெருக்கமான பணிச்சுமை தான் இது.
டி20யை பொறுத்தவரை, அதுவும் குறிப்பாக ஐபிஎல் போட்டியில் வாரத்துக்கு மூன்று ஆட்டங்களில் விளையாடினால், அதில் இரு நாள்கள் பயணம் இருக்கும். ஒரு நேரம் தான் பயிற்சி இருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால், 20 ஓவர்கள் வீசலாம். இது டெஸ்ட் பணிச்சுமையுடன் ஒப்பிடும்போது, அதில் பாதி தான், அல்லது அதற்கும் குறைவு தான். இதிலிருந்து டெஸ்டுக்கு மாறுவது என்பது மிகப் பெரிய மாற்றம். அதுவும் அடுத்தடுத்த நாள்கள் நீங்கள் பந்துவீசப்போவதில்லை. எனவே, டி20யிலிருந்து டெஸ்டுக்கு மாறுவது என்பது மிகப் பெரிய மாறுதல்.
அடுத்த உலகக் கோப்பைக்கும் பும்ரா மிக முக்கியமானவர். இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள் நடைபெறவுள்ளன. தொடர்ச்சியாக இரு டெஸ்டுகளுக்கு மேல் அவர் விளையாடக் கூடாது. ஐபிஎல் போட்டியின் பின்பகுதியிலிருந்து டெஸ்டுக்கு மாறுவது என்பது மிக அபாயகரமான ஒன்று. எனவே, அவருடையப் பணிச்சுமையை எப்படி கையாளப் போகிறார்கள் என்பது தான் இங்கு முக்கியமான விஷயம்.
ஏற்கெனவே காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டால், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். காரணம், அதே இடத்தில் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய முடியுமா எனத் தெரியவில்லை.
அவர் மீண்டும் பந்துவீசத் தொடங்கியவுடன் எந்தளவுக்கு தீவிரத்தன்மையுடன் பந்துவீசுகிறார் என்பதைப் பொறுத்தே பிரச்னை இருக்கிறது. உன் கிரிக்கெட் வாழ்க்கையின் நலனைக் கருத்தில் கொண்டே இதைச் சொல்கிறோம் என வெளிப்படையான உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்.
எந்தவொரு வீரர் இந்நிலையை எதிர்கொண்டாலும் சரி.. நானும் இதை எதிர்கொண்டிருக்கிறேன். எதிர்கொள்ளும்போது, மீண்டும் வந்து விளையாட வேண்டும் என்கிற ஆர்வம் அதீதமாக இருக்கும். அதேசமயம், சில நேரங்களில் இதில் அபாயங்களும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில சமரசங்களைச் செய்தாக வேண்டும்" என்றார் ஷேன் பாண்ட்.
ஆஸ்திரேலிய பயணத்தின்போது பிஜிடி தொடரில் பும்ரா 9 இன்னிங்ஸில் மொத்தம் 151.2 ஓவர்கள் வீசினார். மெல்போர்ன் டெஸ்டில் மட்டும் 52 ஓவர்கள் வீசினார். ஒரு டெஸ்டில் பும்ரா வீசிய அதிக ஓவர்கள் இது. இங்கிலாந்து பயணத்தின்போதும் இந்தியா 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. பிஜிடி தொடரில் கொடுக்கப்பட்ட பணிச்சுமையை பும்ரா இங்கிலாந்திலும் எதிர்கொள்ளக் கூடாது என்பது தான் ஷேன் பாண்டின் மையக் கருத்தாக உள்ளது.
பிஜிடி தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா, காயத்திலிருந்து குணமடைந்து ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் எப்போது இணைவார் என்பது இன்னும் உறுதிபடத் தெரியவில்லை.