
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
மெல்போர்ன் டெஸ்டுக்கு முன்பு 904 புள்ளிகளுடன் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்தியப் பந்துவீச்சாளர் என்ற அஸ்வின் சாதனையை சமன் செய்திருந்த பும்ரா, தற்போது 907 புள்ளிகளைப் பெற்று சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியடைந்தாலும், வெற்றி வாய்ப்புக்கான ஒரு சூழலை ஏற்படுத்தித் தந்ததில், பும்ரா மிக முக்கியப் பங்கு வகித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் உள்பட மொத்தம் 9 விக்கெட்டுகளைச் சாய்த்தார் பும்ரா.
இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியாகியுள்ளது. இதில் 904 புள்ளிகளுடன் அஸ்வின் சாதனையை சமன் செய்து முதலிடத்தில் இருந்த பும்ரா, தற்போது 907 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2024-ல் மட்டும் டெஸ்டில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. அதுவும் 14.92 சராசரியில் 30.1 ஸ்டிரைக் ரேட்டில் இவ்வளவு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்து மெல்போர்ன் டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கம்மின்ஸ்.