
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டில் 367 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது பற்றி பிரையன் லாரா (Brian Lara) தன்னிடம் பேசியதாக தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் (Wiaan Mulder) தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேவுக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா முதலில் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்திய ஆல்-ரவுண்டர் வியான் முல்டர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். ஹசிம் ஆம்லாவுக்குப் பிறகு முச்சதம் அடித்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்திருந்தது. வியான் முல்டர் 367 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாராவின் 400* ரன்கள் என்ற உலக சாதனையை வியான் முல்டர் முறியடிக்க 33 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க இன்னிங்ஸை டிக்ளேர் செய்து ஆச்சர்யமளித்தார் வியான் முல்டர்.
மேலும் படிக்க: 367 ரன்களில் டிக்ளேர் செய்த வியான் முல்டர்: தப்பியது லாராவின் சாதனை!
டிக்ளேர் பற்றி வியான் முல்டர் கூறுகையில், "பிரையன் லாரா ஒரு ஜாம்பவான். 400* ரன்கள் எனும் சாதனையை அவர் தக்கவைத்துக்கொள்வது தான் சரியானதாக இருக்கும்" என்றார். இந்நிலையில், 367 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது பற்றி பிரையன் லாரா தன்னிடம் பேசியது பற்றி மனம் திறந்துள்ளார் வியான் முல்டர்.
"உனக்கான சகாப்தத்தை நீ உருவாக்கி வருவதாக பிரையன் லாரா என்னிடம் கூறினார். சாதனையை முறியடிக்க முயற்சித்திருக்க வேண்டும் என்றார். முறியடிக்கப்படுவதற்காகவே சாதனைகள் என்றார். மீண்டும் இதேபோன்ற ஒரு நிலையில் நான் இருந்தால், தான் எடுத்த ரன்களைவிட அதிக ரன்களை எடுக்க வேண்டும் என அவர் வாழ்த்தினார். அவர் தரப்பிலிருந்து வேடிக்கையான பார்வையை முன்வைத்துள்ளார். ஆனால், இப்போதும்கூட நான் செய்தது சரிதான் என்றே நம்புகிறேன். ஆட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது எனக்கு மிக முக்கியம்" என்றார் வியான் முல்டர்.
மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா கடந்த 2004-ல் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 582 பந்துகளில் 400 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க சாதனைகளில் லாராவின் 400*-க்கு முக்கிய இடம் உண்டு.
டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் வியான் முல்டர் 367* ரன்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.