இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
2022-ல் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். இவரின் வருகைக்குப் பிறகு ‘பேஸ்பால்’ என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்டில் வெளிப்படுத்தி அதனை பிரபலமைடையச் செய்தது இங்கிலாந்து அணி.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளராகவும் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளராக ஜனவரி 2025 முதல் பொறுப்பேற்க உள்ள மெக்கல்லமின் பதவிக்காலம் 2027-ல் நிறைவடைகிறது.
முன்னதாக, கடந்த மே 2022 முதல் இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளராக இருந்த மேத்யூ மாட் கடந்த ஜூலையில் அப்பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஜனவரி 2025 முதல் பொறுப்பேற்கும் மெக்கல்லமுக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.
2025-26 ஆஷஸ் தொடர், சாம்பியன்ஸ் கோப்பை 2025, டி20 உலகக் கோப்பை 2026, ஆஷஸ் தொடர் 2027, ஒருநாள் உலகக் கோப்பை 2027 போன்ற பெரிய போட்டிகளில் இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு மெக்கல்லமுக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் 2025-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்று லண்டன் லார்ட்ஸில் ஜூன் 11 - 15 வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே 3, 4- வது இடங்களில் உள்ளன.
ஒருவேளை புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் 2 இடங்களுக்குள் வரும் பட்சத்தில் மெக்கல்லமுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மேலும் ஒரு சவாலாக அமையும்.