
சமீபத்தில் முடிந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஆட்டம் மோசமாக இருந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொழுதுபோக்காக விளையாடக்கூடாது என்றும், ஐபிஎல் போட்டியால் இங்கிலாந்தின் சராசரி வீரர்கள் பணக்காரர்களாக மாறினார்கள் என்றும் ஜெஃப்ரி பாய்காட் டெலிகிராஃப் ஆங்கில பத்திரிகையில் எழுதியுள்ளார்.
அவர் கூறியதாவது: “சமீபத்தில் மே.இ. தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியை பார்த்தேன். அதில், இங்கிலாந்து அணி மிகவும் மோசமாக விளையாடியது.
ஐபிஎல் மூலம் இங்கிலாந்தின் சாதாரண மற்றும் சராசரியான வீரர்கள் கூட பணக்காரர்களாக மாறினர். முன்னதாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நன்றாக தொடங்கி 4-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. வேகமாக ரன்களை சேர்ப்பதில் கவனம் செலுத்திய இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதை குறித்து யோசிக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொழுதுபோக்காக விளையாடக்கூடாது. வீரர்களுக்கு வெற்றி பெறுவது முக்கியமில்லை என்றால், அவர்கள் சர்க்கஸ் குழுவில் இணைந்து உலகம் முழுவதும் சுற்றலாம். பேஸ்பால் உத்தியைப் பயன்படுத்துவது சில நேரங்களில் நல்ல முடிவுகளை கொடுத்தாலும், ஆஷஸ் தொடரையும் இழக்க நேரிட்டது” என்றார்.