ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினால், கோலி ஆட்டமிழந்துவிடுவார்: சங்க்வானுக்கு ஓட்டுநர் வழங்கிய அறிவுரை

"மற்றவருடைய பலவீனத்தில் கவனம் செலுத்தாமல், என்னுடையப் பலத்தில் கவனம் செலுத்த விரும்பினேன்."
ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினால், கோலி ஆட்டமிழந்துவிடுவார்: சங்க்வானுக்கு ஓட்டுநர் வழங்கிய அறிவுரை
படம்: https://www.instagram.com/himanshusangwan69/
2 min read

ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினால் கோலி ஆட்டமிழந்துவிடுவார் என பேருந்து ஓட்டுநர் கூட கூறியதாக ரஞ்சியில் அவரை போல்ட் செய்த ரயில்வேஸ் பந்துவீச்சாளர் ஹிமன்ஷு சங்க்வான் தெரிவித்துள்ளார்.

டெஸ்டில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்ததையடுத்து, வீரர்கள் அனைவரும் உள்நாட்டுப் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என பிசிசிஐ வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இதன்படி கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயிஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் உள்ளிட்டோர் ஜனவரி 23 அன்று தொடங்கிய ரஞ்சி ஆட்டங்களில் விளையாடினார்கள்.

கழுத்துப் பகுதியில் வலி இருப்பதாகக் கூறி, ரஞ்சி போட்டியில் விளையாடுவதைத் தவிர்த்தார் கோலி. இது சரியானதைத் தொடர்ந்து, ஜனவரி 30 அன்று ரயில்வேஸுக்கு எதிராகத் தொடங்கிய ஆட்டத்தில் தில்லிக்காகக் களமிறங்கினார் கோலி.

12 ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டுப் போட்டிக்குத் திரும்பியதால், தில்லி மைதானம் கோலியைக் காண நிரம்பி வழிந்தது. எனினும், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பேட்டிங்கில் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 6 ரன்களுக்கு ஆஃப் ஸ்டம்புகள் பறக்க போல்டானார்.

இவரை போல்ட் செய்த ரயில்வேஸ் வேகப்பந்துவீச்சாளர் ஹிமன்ஷு சங்க்வான் பாராட்டு மழையைப் பெற்றது மட்டுமில்லாமல், சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் சம்பாதித்தார்.

கோலி விக்கெட்டை வீழ்த்தியது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் அளித்த பேட்டியில் ஹிமன்ஷு சங்க்வான் விளக்கமாகப் பேசியுள்ளார்.

"தில்லியுடனான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் தில்லிக்காக விளையாடலாம் எனப் பேச்சுகள் அடிபட்டன. இந்த ஆட்டம் நேரலை செய்யப்படும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்பது மெதுவாகத் தெரியத் தொடங்கியது. ஆனால், விராட் கோலி விளையாடுவார் எனத் தெரிய வந்தது. ஆட்டம் நேரலை செய்யப்பட்டது.

ரயில்வேஸ் வேகப்பந்துவீச்சுப் படையை நான் வழிநடத்துகிறேன். விராட் கோலி விக்கெட்டை நான் வீழ்த்திவிடுவேன் என அணி வீரர்கள் அனைவரும் என்னிடம் சொன்னார்கள்.

நாங்கள் பயணித்த பேருந்து ஓட்டுநர் கூட, விராட் கோலிக்கு 4-வது, 5-வது ஸ்டம்ப் லைனில் பந்துவீசினால், அவர் ஆட்டமிழந்துவிடுவார் என்று கூறினார். எனக்கு தன்னம்பிக்கை இருந்தது. மற்றவருடைய பலவீனத்தில் கவனம் செலுத்தாமல், என்னுடையப் பலத்தில் கவனம் செலுத்த விரும்பினேன். என்னுடையப் பலத்துக்குப் பந்துவீசினேன், விக்கெட் கிடைத்தது.

விராட் கோலிக்கு என்று பொதுவான திட்டம் ஏதும் இல்லை.

எங்களுடைய இன்னிங்ஸ் முடிந்த பிறகு, ஓய்வறையை நோக்கி நான் சென்றுகொண்டிருந்தேன். விராட் கோலி களத்துக்குள் வந்துகொண்டிருந்தார். ஆயுஷ் பதோனி மற்றும் விராட் கோலி அங்கிருந்தார்கள். விராட் கோலி, அவரே என்னிடம் கைகளை குலுக்கிக்கொண்டு, சிறப்பாகப் பந்துவீசினாய் என்று கூறினார். உணவு இடைவேளையில் அவருடன் புகைப்படம் வேண்டும் என்று கேட்டேன். தில்லி ஓய்வறைக்குச் சென்றேன். அவர் விக்கெட்டை வீழ்த்திய அதே பந்துடன் சென்றேன். அவரும் என்னை வீழ்த்திய அதே பந்துதானா என்று கேட்டார்.

இந்த ஆட்டத்துக்குப் பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. நான் வீடு திரும்பியபோது, தவறவிடப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை 300 ஆக இருந்தது. 200-230 குறுஞ்செய்திகள் வந்திருந்தன. என்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கை தனிப்பட்ட கணக்காக வைத்திருந்தேன். தற்போது நிறைய அன்பு கிடைக்கிறது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. என்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கை பொதுவானதாக மாற்றிவிட்டேன்" என்றார் சங்க்வான்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in