லக்னௌ பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருண் நியமனம் | Bharat Arun

பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்புடன் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
லக்னௌ பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருண் நியமனம் | Bharat Arun
1 min read

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்புடைய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இருந்தார்.

ஐபிஎல் 2025-ல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஐபிஎல் 2026-க்கு முன்பு அந்த அணி நிறைய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பரத் அருணுக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்புடன் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இளம் பந்துவீச்சாளர்களைக் கண்டறிவது, ஓராண்டில் அவர்கள் மேம்படுவதைப் பார்வையிடுவது உள்ளிட்ட பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சுழற்பந்துவீச்சு ஆலோசகராக கார்ல் க்ரோவை நியமிக்கவும் லக்னௌ முடிவு செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைனின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பைச் செலுத்தியவர் கார்ல் க்ரோ.

ஐபிஎல் 2025-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது. இதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக சந்திரகாந்த் பண்டிட் முடிவு செய்துள்ளதாக கேகேஆர் அணி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, பரத் அருண் தற்போது லக்னௌ அணியுடன் இணைந்துள்ளார். இவர் 2014-15-ல் இந்திய அணியுடன் பயணித்தார். 2015 முதல் 2017 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பயணித்தார். 2017 முதல் 2021 வரை மீண்டும் இந்திய அணியுடன் பயணித்தார். இதன் பிறகே கேகேஆர் அணியுடன் இணைந்து பயணித்து வந்தார். ஐபிஎல் 2024 வரை ஒப்பந்தம் இருந்த நிலையில், ஐபிஎல் 2025 வரை ஓராண்டுக்கு ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

Bharat Arun | Lucknow Super Giants | LSG | IPL 2026

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in