
பிஜிடி தொடரின் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் ஜெயிஸ்வால், கேஎல் ராகுல் அதிரடியால் வலுவான நிலையை எட்டியுள்ளது இந்திய அணி.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்டுகள் கொண்ட பிஜிடி தொடர் நேற்று (நவ.22) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆரம்பம் முதல் வேகப்பந்துவீச்சில் இந்திய பேட்டர்கள் தடுமாறினார்கள். ஜெயிஸ்வால், படிக்கல் ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமலும், கோலி 5, கேஎல் ராகுல் 26, ஜுரெல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ரிஷப் பந்த் 37 ரன்களும், நிதிஷ் ரெட்டி 41 ரன்களும் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸி. அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் முதல் நெருக்கடி அளிக்கப்பட்டது. அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 26 ரன்களும் அலெக்ஸ் கேரி 21 ரன்களும் எடுக்க ஆஸி. அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதன் பிறகு 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது ஜெயிஸ்வால் - ராகுல் கூட்டணி. முதல் இன்னிங்ஸில் இருவரும் வேகமாக வெளியேறிய நிலையில், 2-வது இன்னிங்ஸில் ஆஸி. அணியின் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டை எடுப்பதற்கான வாய்ப்பை இருவரும் கொடுக்கவே இல்லை. 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஆஸி. அணிக்கு பலன் கிடைக்கவில்லை.
இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து, விக்கெட்டை இழக்காமல் 150 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த கூட்டணி எனும் சாதனையைப் படைத்தது ஜெயிஸ்வால் - ராகுல் கூட்டணி.
2-வது நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி நிச்சயம் இந்த டெஸ்டில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.