பிஜிடி தொடரின் முதல் டெஸ்டின் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக 17 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்டுகள் கொண்ட பிஜிடி தொடர் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா அறிமுகம். துருவ் ஜுரெல், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் தேர்வானார்கள். அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஒரே சுழற்பந்து வீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆரம்பம் முதல் வேகப்பந்துவீச்சில் இந்திய பேட்டர்கள் தடுமாறினார்கள். ஜெயிஸ்வால், படிக்கல் ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமலும், கோலி 5, கேஎல் ராகுல் 26, ஜுரெல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற ரிஷப் பந்த், நிதிஷ் ரெட்டி கூட்டணி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது.
ரிஷப் பந்த் 37 ரன்களும், நிதிஷ் ரெட்டி 41 ரன்களும் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸி. அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் முதல் நெருக்கடி அளித்தார் பும்ரா. மெக்ஸ்வீனி 10, கவாஜா 8 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும் பும்ரா பந்தில் வெளியேறினார்கள்.
தனது முதல் டெஸ்டின் முதல் பந்திலிருந்தே அசத்தலாக பந்துவீசிய ஹர்ஷித் ராணா, டிராவிஸ் ஹெட்டை 11 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். நீண்ட நேரம் களத்தில் இருந்த லபுஷேன் 2 ரன்களிலும் மிட்செல் மார்ஷ் 6 ரன்களிலும் வெளியேற முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டன் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் ஆஸி. அணி 83 ரன்கள் பின்தங்கியுள்ளது.