
காபா டெஸ்ட் நான்காம் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனிலுள்ள காபாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 33 ரன்களுடனும் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
முதல் நாள் மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் பெரிதளவு பாதிக்கப்பட்டதால், நான்காவது ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மழைக்கான எச்சரிக்கை இருந்தாலும் நான்காவது ஆட்டத்தில் மழை குறுக்கீடு ஒப்பீட்டளவில் குறைவு.
நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் ஆட்டமிழந்திருக்கக்கூடும். மிக எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்டீவ் ஸ்மித் தவறவிட்டார்.
வாய்ப்பைப் பயன்படுத்தி ராகுல் சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்தார். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஏமாற்றமளித்தார். 10 ரன்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸிடம் வீழ்ந்தார்.
ராகுலுடன் ஜடேஜா இணைந்தார். இருவரும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்கள்.
மற்றுமொரு பின்னடைவாக ஹேசில்வுட் காயமடைந்தார். இன்று காலை பயிற்சியின்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு ஓவர் மட்டுமே அவரால் வீச முடிந்தது. ஒரு பந்துவீச்சாளர் குறைவாக இருந்தது இந்தியாவுக்கு உதவியது.
ராகுல் 85 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
பிரிஸ்பேன் நேரப்படி காலை 11 மணி முதல் 11.25 வரை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இருவரும் திடமான பேட்டிங்கை வெளிப்படுத்த இந்தக் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்தது.
80 ரன்களை கடந்த ராகுல் சதத்தை நெருங்குவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லயன் பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் பாய்ச்சலான கேட்ச்சால் ராகுல் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க 245 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் ராகுல் விக்கெட் பெரிய பின்னடைவாக அமைந்தது.
ராகுல் ஆட்டமிழந்த பிறகும் ஜடேஜா தனது நல்ல பேட்டிங்கை தொடர்ந்தார். நிதிஷ் ரெட்டி ஒத்துழைப்பு தந்து வருகிறார்.
நான்காம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 41 ரன்களுடனும் நிதிஷ் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஜடேஜா அரை சதத்தைக் கடந்து இன்னிங்ஸை மேற்கொண்டு கட்டமைத்தார். 7-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில், நிதிஷ் ரெட்டி 16 ரன்களுக்கு கம்மின்ஸிடம் வீழ்ந்தார்.
தேநீர் இடைவேளையில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 65 ரன்கள் எடுத்துள்ளார். ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி இன்னும் 45 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.