ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் அழைத்தால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடத் தயார் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், 2022-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும் தனது முடிவை மாற்றிக்கொண்டு 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்றார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.
இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மெக்கல்லம் தன்னை அழைத்தால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடத் தயார் என்று கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
முன்னதாக கெவின் பீட்டர்சன், மொயீன் அலி, ஷாஹித் அஃப்ரிடி எனப் பலரும், இதுபோன்று ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவன் பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடி. 2006, 2010, 2011, 2014, 2017 என 5 முறை ஓய்வை அறிவித்து 3 முறை மீண்டும் விளையாட வந்தவர். ஸ்டோக்ஸ் போகிற போக்கைப் பார்த்தால் அஃப்ரிடிக்குப் போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது.
சமீபத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “ஓய்வு அறிவிப்பு என்பது கிரிக்கெட்டில் கேலிக்கூத்தாகிவிட்டது. ஓய்வை அறிவித்த பிறகும் மீண்டும் வந்து விளையாடுகிறார்கள். இந்தியாவில் இது இன்னும் நடக்கவில்லை” என்று பேசியிருந்தார்.