நரைன்
நரைன்ANI

உலகக் கோப்பையில் விளையாட வாங்க: நரைனுக்கு பவல் அழைப்பு

“கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறேன்”.

சுனில் நரைனின் ஓய்வு முடிவை திரும்பப் பெற சொல்லி கேட்டுக் கொண்டதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டி20 கேப்டன் ரோவ்மன் பவல் பேசியுள்ளார்.

நேற்று நடைபெற்ற கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லரின் அதிரடிச் சதத்தால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. அவருடன் ரோவ்மன் பவலும் நல்ல கூட்டணியை அமைத்து தந்தார். பவல் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய நரைன் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார். இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு, “சுனில் நரைனிடம் ஓய்வு முடிவை திரும்பப் பெற சொல்லி கேட்டுக் கொண்டேன்” என ரோவ்மன் பவல் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: “கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர் கேட்பதாக இல்லை, அனைவரையும் தவிர்த்துவிட்டு செல்கிறார். பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறேன். டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, நிச்சயம் அவர் மனதை மாற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

கடைசியாக 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிய சுனில் நரைன், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் 1-ல் தொடங்கவுள்ள நிலையில் நரைன் தனது முடிவை திரும்பப் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நரைன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 51 டி20 ஆட்டங்களில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in