இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் விளம்பரத்தை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
நவம்பர் 2021-ல் ராகுல் டிராவிட் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் விளம்பரத்தை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார். மேலும், ராகுல் டிராவிட் விருப்பப்பட்டால் அவர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த முறை பயிற்சியாளரின் பதவிக்காலம் முடிந்தப் பிறகே இது குறித்த விளம்பரத்தை வெளியிட்டனர். இம்முறை முன்னதாகவே புதிய பயிற்சியாளருக்கான விளம்பரம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பயிற்சியாளரின் பதவிக்காலம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் ஷா கூறியதாவது: “நீண்ட கால பயிற்சியாளரை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்திய அணியை பொறுத்தவரை மூன்று வடிவங்களுக்கு மூன்று வித்தியாசமான பயிற்சியாளர் என்பது அவசியம் இல்லை. டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் நமது அணியில் அதிகமாக உள்ளனர். அனைத்துக்கும் மேலாக இது கிரிக்கெட் ஆலோசனை குழு எடுத்த முடிவு, அதனால் நான் அதனை செயல்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணி 2 பிரிவுகளாக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப் செல்லாத அணிகளில் உள்ள வீரர்கள் முன்னதாகவே புறப்படுவார்கள் என்றும், மற்ற அணி வீரர்கள் ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு பிறகு புறப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 முதல் நடைபெறுகிறது.