முன்னணி விளம்பர ஸ்பான்சர்: அப்போலோ டயர்ஸுடன் ரூ. 579 கோடிக்கு பிசிசிஐ ஒப்பந்தம்! | BCCI | Apollo Tyres |

இருநாடுகளுக்கு இடையிலான தொடர்களில் 121 ஆட்டங்கள் மற்றும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் 21 ஆட்டங்கள் இதில் அடக்கம்.
முன்னணி விளம்பர ஸ்பான்சர்: அப்போலோ டயர்ஸுடன் ரூ. 579 கோடிக்கு பிசிசிஐ ஒப்பந்தம்! | BCCI | Apollo Tyres |
ANI
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விளம்பர ஸ்பான்சர் நிறுவனமாக அப்போலோ டயர்ஸுடன் பிசிசிஐ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 579 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னணி விளம்பர ஸ்பான்சராக இருந்த பைஜூஸின் ஒப்பந்தம் 2023 மார்ச்சில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, ட்ரீம்11 நிறுவனத்துடன் 2023-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது பிசிசிஐ. இந்த ஒப்பந்தமானது மூன்றாண்டு காலத்துக்குக் கையெழுத்தானது.

இதனிடையே, இணையவழி சூதாட்டங்களை முற்றிலுமாகத் தடை செய்யும் நோக்கில், ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மசோதாவானது சட்டமானது. பணம் சார்ந்த இணையவழி விளையாட்டுகள் மற்றும் பணம் சார்ந்த இணையவழி விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களுக்கும் இந்தச் சட்டம் தடை விதிக்கிறது.

இதன் காரணமாக, இந்திய அணியின் விளம்பர ஸ்பான்சருக்காக கையெழுத்தான ஒப்பந்தத்தை பரஸ்பரம் முறித்துக்கொள்ள ட்ரீம் 11 மற்றும் பிசிசிஐ முடிவு செய்தன. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் கைக்கோர்க்க மாட்டோம் என்பதை பிசிசிஐ உறுதிபடுத்தும் என்று பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா உறுதியளித்தார். ட்ரீம் 11 உடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மதிப்பு ஏறத்தாழ ரூ. 359 கோடி.

ஆசியக் கோப்பையில் விளம்பர நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்படாத சீருடையை அணிந்து இந்திய அணி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கும் இதே நிலை தான்.

புதிய விளம்பர ஸ்பான்சரை நிறுவனத்தைத் தேடும் பணியை பிசிசிஐ செப்டம்பர் 2-ல் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. செப்டம்பர் 16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அப்போலோ டயர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அப்போலோ டயர்ஸுடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 579 கோடி. இருநாடுகளுக்கு இடையிலான தொடர்களில் 121 ஆட்டங்கள் மற்றும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் 21 ஆட்டங்கள் இதில் அடக்கம். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCCI | Team India | New Lead Sponsor | Apollo Tyres | Asia Cup | Asia Cup T20 | Asia Cup 2025 | BCCI Sponsor | Jersey Sponsor |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in