ஷ்ரேயஸ் ஐயருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதா?: பிசிசிஐ விளக்கம் | Shreyas Iyer |

ஷ்ரேயஸ் ஐயருக்கு உதவும் வகையில் அவருடைய சகோதரி ஷ்ரேஸ்டா ஐயரை சிட்னிக்கு அனுப்ப பிசிசிஐ ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
"Shreyas Iyer is on the road to recovery": BCCI provide medical update on Indian vice-captain
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாளில் காயமடைந்த ஷ்ரேயஸ் ஐயர்.
2 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் ஆட்டத்தின்போது காயமடைந்த ஷ்ரேயஸ் ஐயருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதா இல்லையா என்பதை பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா விளக்கியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் கடந்த அக்டோபர் 25 அன்று சிட்னியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார் இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.

பின்னோக்கிச் சென்று இந்த கேட்சை பிடித்தபோது அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் நெஞ்சுப் பகுதியில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக களத்திலிருந்து அவர் வெளியேறினார்.

இந்தக் காயம் காரணமாக நெஞ்சாங்கூட்டில் ரத்தக் கசிவு இருப்பதாகவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஷ்ரேயஸ் ஐயர் சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவ ரீதியாக நிலையாக இருப்பதாகவும் மற்றும் குணமடைந்து வருவதாகவும் பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்திய அணியின் மருத்துவர், ஷ்ரேயஸ் ஐயருடன் சிட்னியில் இருப்பதாகவும் அவருடைய உடல்நிலை தேறி வருவதைக் கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவக்கப்பட்டது. இதனிடையே, ஷ்ரேயஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு வந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

கான்பெரா டி20 ஆட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர் உடல் நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்தார். அவருடன் பேசியதாகவும் சூர்யகுமார் யாதவ் கூறினார். சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷ்ரேயஸ் ஐயரின் சிகிச்சைக்கு உதவும் வகையில் அவருடன் தங்கியிருந்து கவனித்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவர் ரிஸ்வான் கான்.

ஷ்ரேயஸ் உடல்நிலை குறித்து தேவஜித் சைகியா டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியதாவது:

"ஷ்ரேயஸ் உடல்நிலை மிக நன்றாகவே தேறியுள்ளது. மருத்துவர் எதிர்பார்த்ததைவிட வேகமாகக் குணமடைந்து வருகிறார். மருத்துவர் ரிஸ்வானுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்கிறேன். இயல்பாக முழுமையாகக் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், ஷ்ரேயஸ் ஐயரிடமிருந்து ஆச்சர்யத்தை எதிர்பார்க்கலாம். காரணம், அதற்கு முன்னதாகவே அவர் குணமடையலாம்.

ஷ்ரேயஸ் உடல்நிலையின் முன்னேற்றத்தில் மருத்துவர்கள் மிகுந்த திருப்தியில் இருக்கிறார்கள். அவர் இயல்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டார். அவருடைய காயம் மிகத் தீவிரமானது. ஆனால், அவர் குணமடைந்துவிட்டார். அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். இதனால் தான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

ஷ்ரேயஸ் ஐயருக்கு அறுவைச் சிகிச்சை செய்யவில்லை. ஆனால், வேறொரு முறையில் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே அவரால் வேகமாகக் குணமடைய முடிந்துள்ளது. ஷ்ரேயஸ் குணமடைய தன்னால் முடிந்த அனைத்தையும் பிசிசிஐ செய்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயரின் சிகிச்சை மற்றும் குணமடைந்து வருவதிலேயே பிசிசிஐ-யின் மருத்துவர் ரிஸ்வான் முழுக் கவனத்தில் இருக்கிறார். சிட்னியிலுள்ள சிறந்த மருத்துவமனையில் தான் ஷ்ரேயஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றார் அவர்.

ஷ்ரேயஸ் ஐயருக்கு உதவும் வகையில் அவருடைய சகோதரி ஷ்ரேஸ்டா ஐயரை சிட்னிக்கு அனுப்ப பிசிசிஐ ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Summary


BCCI Secretary Devajit Saikia has clarified whether Shreyas Iyer underwent surgery or not after sustaining an injury during the Sydney ODI against Australia.

Shreyas Iyer | BCCI | Sydney ODI | Devajit Saikia | BCCI Secretary |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in