ஆர்சிபியை வேறொரு உரிமையாளரிடம் கொடுங்கள்: மகேஷ் பூபதி வேண்டுகோள்

கிரிக்கெட், ஐபிஎல், ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ நலனுக்காகக் கூறுகிறேன்.
ஆர்சிபியை வேறொரு உரிமையாளரிடம் கொடுங்கள்: மகேஷ் பூபதி வேண்டுகோள்
ANI

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வேறொரு உரிமையாளரிடம் விற்பனை செய்வதற்கான முடிவுகளை பிசிசிஐ எடுக்க வேண்டும் என பிரபல டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் 30-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெங்களூருவில் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

இலக்கை விரட்டிய பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் பருவத்தில் ஆர்சிபி சந்தித்த 6-வது தோல்வி இது. 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்சிபி வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஐபிஎல் போட்டியில் ஒருமுறைகூட கோப்பை வெல்லாதது ஆர்சிபி மீதுள்ள பெரிய விமர்சனம். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில், தில்ஷன், வாட்சன், ஃபிஞ்ச், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி பேட்டர்களை இந்த அணி தேர்வு செய்தாலும்கூட கோப்பை இன்னும் எட்டா கனியாகவே உள்ளது.

அணிக்குத் தேவையான சரியான பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வதில் ஆர்சிபி சொதப்பி வருவதாக ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக சஹால், ஹசரங்கா போன்ற அற்புதமான சுழற்பந்துவீச்சாளர்களை விடுவித்தால், இவர்களுக்கு சரியான மாற்றைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், ஆர்சிபி அதைச் செய்வதில்லை என்று விமர்சனங்களை வைக்கப்படுவது உண்டு.

இந்தப் பருவத்திலும் ஏலத்தின்போது பந்துவீச்சாளர்கள் தேர்வு சரியானதாக இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதற்கேற்ப ஆர்சிபியும் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில்தான் ஆர்சிபியை வேறொரு உரிமையாளரிடம் விற்பனை செய்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க வேண்டும் என பிரபல டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் மகேஷ் பூபதி பதிவிட்டுள்ளதாவது:

"கிரிக்கெட், ஐபிஎல், ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ நலனுக்காகக் கூறுகிறேன். மற்ற அணிகளைப்போல ஒரு விளையாட்டு அணியைக் கட்டமைக்க விரும்பும் புதிய உரிமையாளரிடம் ஆர்சிபியை (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) பிசிசிஐ விற்பனை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in