
இந்திய வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும், குடும்பத்தினருடன் வீரர்கள் பயணிக்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது.
சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது, பிஜிடி தொடரை 1-3 என்ற கணக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாகத் தகுதி பெறாதது என இந்திய அணி மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பிசிசிஐ கடந்த வார இறுதியில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்திய அணி வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வீரர்களுக்கு பிசிசிஐ விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்த விவரம்
உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவது கட்டாயம்
இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கும் வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
அசாதாரண சூழல்களில் மட்டுமே வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். நடைமுறையின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தேர்வுக் குழுத் தலைவரின் அனுமதி பெற்ற பிறகே, உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
குடும்பத்தினருடன் பயணம் கூடாது
ஆட்டங்கள் மற்றும் பயிற்சி நேரங்களில் வீரர்கள் அனைவரும் அணியுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அணியின் ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதற்காக வீரர்கள் அவரவர் குடும்பத்தினருடன் இணைந்து தனியாகப் பயணிப்பது ஊக்கப்படுத்தப்படாது. தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவரிடம் முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டால், விலக்கு அளிக்கப்படும்.
தனிப்பட்ட பணியாளர்களுக்குக் கட்டுப்பாடு
வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தொடர்களின்போது, வீரர்கள் தனிப்பட்ட முறையில் பணியாளர்களை (தனி மேலாளர்கள், சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள்) வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பயிற்சியிலிருந்து முன்கூட்டியே செல்லக் கூடாது
பயிற்சி நேரம் முழுமையாக நிறைவடையும் முன் வீரர்கள் யாரும் முன்கூட்டியே புறப்படக் கூடாது. அனைத்து வீரர்களும் ஒன்றாகவே பயிற்சிக்கு வந்து செல்ல வேண்டும்.
படப்பிடிப்புகள் கூடாது
போட்டிகள் மற்றும் தொடர்களுக்கு நடுவே வீரர்கள் தனிப்பட்ட முறையில் படப்பிடிப்புகளில் ஈடுபட அனுமதியில்லை. கவனச் சிதறல்களைத் தடுத்து, முழுக் கவனமும் கிரிக்கெட் மற்றும் அணியின் பொறுப்புகள் மீது இருக்க வேண்டும் என்பதற்காக இது கொண்டுவரப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் இணைந்து பயணிப்பதற்கான கொள்கை
வீரர்கள் இந்தியாவுக்கு வெளியே 45 நாள்கள் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டிய சூழல்கள் ஏற்படும்பட்சத்தில், குழந்தைகளுடன் (18 வயதுக்குக் கீழ்) இணையர்கள் இணைந்து பயணிக்கலாம். ஒரு தொடரில் ஒரு முறை இணைந்து பயணம் மேற்கொள்ளலாம். இதன் கால அளவு இரு வாரங்கள்.
வீரர்களுடன் வருபவர்கள், இணைந்து தங்குவதற்கான செலவை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளும். மற்ற செலவுகளுக்கு வீரர்கள் தான் பொறுப்பு.
பயிற்சியாளர், கேப்டன் மற்றும் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர் ஒப்புக்கொண்ட தேதிகளுக்கு இணங்க, வீரர்களுடன் வருபவர்களின் பயணம் திட்டமிடப்பட வேண்டும்.
பயிற்சியாளர், கேப்டன் மற்றும் செயல்பாடுகளுக்கான பொது மேலாளரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றால் மட்டுமே இந்தக் கொள்கையிலிருந்து விலக்கு கோரப்படும். வீரர்களுடன் பயணிப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கால அளவைத் தாண்டி இருக்கும் பட்சத்தில், அதற்கானக் கூடுதல் செலவை பிசிசிஐ ஏற்காது.
பிசிசிஐ விளம்பரப் படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும்
பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ விளம்பரப் படப்பிடிப்புகள், விளம்பரச் செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டும்.
முன்கூட்டியே செல்ல அனுமதி இல்லை
ஆட்டம், போட்டி, தொடர் அல்லது வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்ட கால அளவைக் காட்டிலும் முன்கூட்டியே நிறைவடைந்தாலும், வீரர்கள் அணியுடன்தான் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆட்டம், போட்டி, தொடர் அல்லது வெளிநாட்டுப் பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகே, வீரர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
பிசிசிஐ-யின் வழிமுறைகளை வீரர்கள் பின்பற்றாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐபிஎல் உள்பட பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.