ஜெய் ஷா - கம்பீர் - ரோஹித் - அகர்கர்: 6 மணி நேரம் நடந்த தீவிர ஆலோசனை!

அணி குறித்த முடிவை எடுப்பதில் கம்பீர், ரோஹித் சர்மா, அஜித் அகர்கர் ஆகியோர் ஒத்தக் கருத்தில் இல்லை...
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ 6 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டது.

டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார். கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கையில் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலேயே 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி மிகப் பெரிய விமர்சனத்தைப் பெற்றது. கம்பீரின் பயிற்சி முறை குறித்த கேள்விகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் நேற்று 6 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ததாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான தயார் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றன.

அணி குறித்த முடிவை எடுப்பதில் கம்பீர், ரோஹித் சர்மா, அஜித் அகர்கர் ஆகியோர் ஒத்தக் கருத்தில் இல்லை என்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் காவஸ்கர் டெஸ்ட் தொடருக்கு நிதிஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டதில் இவர்களிடையே மாற்றுக் கருத்துகள் இருப்பதாகத் தெரிகிறது. நிதிஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா 10-க்கும் குறைவான ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளதால், ஐபிஎல் செயல்பாட்டை வைத்து டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்திருப்பதில் குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

அதே வேளையில், நியூசிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே டெஸ்டில் பும்ரா கடைசி நிமிடத்தில் சேர்க்கப்படாதது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. தவிர, இரண்டாவது டெஸ்டில் தோல்வியடைந்தபோதிலும், சுழற்பந்துவீச்சுக்கு ஆதரவான ஆடுகளத்தைத் தேர்வு செய்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்திய அணி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி நவம்பர் 10 அன்று ஆஸ்திரேலியா புறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in