

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ. 51 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷஃபாலி வர்மா 87 ரன்களும் தீப்தி சர்மா 58 ரன்களும் எடுத்தார்கள்.
தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் சதமடித்தபோதிலும், அந்த அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷெஃபாலி வர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றி நாடு முழுக்க உள்ள ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. பல பெண்கள் கிரிக்கெட்டை கையிலெடுக்க இது பெரிய உந்துதலாக அமையப்போகிறது என்று எழுதப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் சாதனையைக் கௌரவிக்கும் விதமாக பிசிசிஐ ரூ. 51 கோடியைப் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.
பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"1983-ல் உலகக் கோப்பையை வென்று கபில் தேவ் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். அதே உற்சாகமும் ஊக்கமும் மகளிர் அணியால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் அவருடைய அணி கோப்பையை மட்டும் வெல்லவில்லை. எல்லா இந்தியர்களுடைய மனங்களையும் வென்றுள்ளார்கள். அடுத்த தலைமுறை மகளிர் கிரிக்கெட்டர்களுக்கான பாதையை இவர்கள் வகுத்துள்ளார்கள். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் மகளிர் கிரிக்கெட் ஏற்கெனவே அடுத்த நிலையை அடைந்துவிட்டது.
பிசிசிஐ பொறுப்பை ஜெய் ஷா ஏற்றதிலிருந்து (2019 முதல் 2024 வரை பிசிசிஐ செயலராக அவர் நீடித்தார்) மகளிர் கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டு வந்தார். கடந்த மாதம் ஐசிசி தலைவர் ஜெய் ஷா மகளிருக்கான பரிசுத் தொகையை 300 சதவீதம் அதிகரித்தார். முன்னதாக, மகளிருக்கான பரிசுத் தொகை சுமார் ரூ. 24.86 கோடியாக இருந்தது. இது தற்போது சுமார் ரூ. 124 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அனைத்தும் மகளிர் கிரிக்கெட்டை பெரிதளவில் விளம்பரப்படுத்தியுள்ளது. அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் பிசிசிஐ ரூ. 51 கோடியைப் பரிசுத் தொகையாக அறிவிக்கிறது" என்றார் தேவஜித் சைகியா.
மேலும், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி ஐசிசியிடமிருந்து சுமார் ரூ. 39.78 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெறவுள்ளது.
2005 மற்றும் 2017-ல் இறுதிச் சுற்று வரை சென்ற இந்திய மகளிர் அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. 2025-ல் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்திய மகளிர் வரலாற்றுச் சரிதத்தை எழுதியுள்ளார்கள்.
The Board of Control for Cricket in India (BCCI) secretary Devajit Saikia announced a cash prize of Rs 51 crore for the ICC Women's World Cup-winning Team India.
BCCI | Devajit Saikia | India Women | Women's World Cup | Harmanpreet Kaur | Deepti Sharma | Shafali Verma |