

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பேட்டர் ஷுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் தனது ஆட்டங்கள் அனைத்தையும் இலங்கையில் விளையாடுகிறது.
இறுதிச் சுற்று அஹமதாபாதில் நடைபெறும். பாகிஸ்தான் தகுதி பெற்றால், இறுதிச் சுற்று கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, மும்பை, அஹமதாபாத், தில்லி ஆகிய இடங்களில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையில் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகளுடன் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரு தமிழர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
இப்போட்டிக்கான இந்திய அணி செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).
இந்திய அணியில் இரு விக்கெட் கீப்பர்களில் ஒருவராக ஜிதேஷ் சர்மா இடம்பெற்று வந்த நிலையில், உலகக் கோப்பைக்கான அணியில் அவருக்கு இடமில்லை.
கடந்த சில டி20 தொடர்களில் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கி வந்ததால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்த ஆட்டங்களில் அவர் தான் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். அப்போதெல்லாம் ஜிதேஷ் சர்மா தான் விக்கெட் கீப்பிங் மற்றும் ஃபினிஷிங் பணியில் இருந்தார்.
டி20 உலகக் கோப்பையில் ஷுப்மன் கில் இல்லாததால், தொடக்க பேட்டராக சஞ்சு சாம்சன் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இரண்டாவது விக்கெட் கீப்பர் வாய்ப்பு ஜிதேஷ் சர்மா வசம் செல்லாமல் இஷான் கிஷன் வசம் சென்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும், ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இஷான் கிஷான் அட்டகாசமாக விளையாடியதால் அவருக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போட்டியில் 10 இன்னிங்ஸில் 57.32 சராசரியில் 197.32 ஸ்டிரைக் ரேட்டில் 517 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரு சதங்கள், இரு அரை சதங்கள் அடக்கம். ஒரு சதத்தை ஹரியாணாவுக்கு எதிரான இறுதிச் சுற்றில் அடித்து கேப்டனாக ஜார்க்கண்ட் கோப்பையை வெல்ல உதவினார்.
டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இதே அணி தான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 நாக்பூரில் ஜனவரி 21 அன்று நடைபெறுகிறது. 5-வது மற்றும் கடைசி டி20 ஜனவரி 31 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
BCCI announced Team India's Squad for T20 World Cup: Gill missing
T20 World Cup | Team India | India Squad | Shubman Gill | Jitesh Sharma | Sanju Samson | Ishan Kishan | Axar Patel | Washington Sundar | Varun Chakravarthy |