
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வெறும் வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் ஆட்டங்கள் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. டி20 தொடர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை நடைபெறுகிறது.
இந்தத் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மா வசமிருந்து ஷுப்மன் கில் வசம் சென்றுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்குள் இந்திய அணியை வழிநடத்த ஷுப்மன் கில் தயாராக வேண்டும் என்பதால் கேப்டன் பொறுப்பானது அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் தேவைப்படாது என்பதாலும், இடக்கை சுழற்பந்துவீச்சாளராக ஏற்கெனவே ஒருவர் (அக்ஷர் படேல்) இருப்பதாலும் ஜடேஜா இடம்பெறவில்லை என அகர்கர் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான திட்டங்களில் ஜடேஜா இருப்பதாகவும் அகர்கர் கூறினார்.
2027 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடவது குறித்தும் அவர்களுடைய எதிர்காலம் குறித்தும் அகர்கரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த அவர், "2027 உலகக் கோப்பை வெகுதூரத்தில் இருக்கிறது. அதுபற்றி இன்று பேசுவது சரியாக இருக்காது" என்றார் அகர்கர். மேலும், கேப்டன் பொறுப்பு மாற்றப்படுவது குறித்து ரோஹித் சர்மாவிடம் கலந்துரையாடப்பட்டதாகவும் அகர்கர் விளக்கமளித்தார். ஆனால், கேப்டன் மாற்றத்தை ரோஹித் சர்மா எவ்வாறு எடுத்துக்கொண்டார் என்பதை அகர்கர் கூறவில்லை.
டிசம்பர் 2021 முதல் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார். இவருடைய தலைமையில் 56 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 42 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. பொறுப்பு கேப்டனாக செயல்பட்டு 2018 ஆசியக் கோப்பையையும் முழுநேர கேப்டனாக இருந்து 2023 ஆசியக் கோப்பையையும் வென்று கொடுத்தார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிச் சுற்று தவிர மற்ற எல்லா ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஒரு தோல்வியைக்கூடச் சந்திக்காமல் சாம்பியன் ஆனது ரோஹித் தலைமையிலான இந்திய அணி.
ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்பு காயமடைந்த ஹார்திக் பாண்டியா இந்தத் தொடர்களில் சேர்க்கப்படவில்லை. இவருக்கு மாற்றாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் காயத்திலிருந்து இன்னும் குணமடையாததால், அவரும் சேர்க்கப்படவில்லை. ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. டி20 அணியில் மட்டும் இடம்பெற்றுள்ளார்.
கடைசியாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு இந்தியா விளையாடும் முதல் ஒருநாள் தொடர் இது. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து 5 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, ஹார்திக் பாண்டியா (காயம்), ரிஷப் பந்த் (காயம்), முஹமது ஷமி ஆகியோர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவர்களுக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி, முஹமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல் மற்றும் யஷஸ்வி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஆசியக் கோப்பையை வென்ற டி20 அணியிலிருந்து இரு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்குப் பதில் நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் கூடுதல் வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்ஷர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முஹமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெயிஸ்வால்.
டி20 தொடருக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
Shubman Gill | Rohit Sharma | Virat Kohli | India tour of Australia |