
பிசிசிஐ கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 14,627 கோடியை கருவூலத்தில் இணைத்து பொருளாதார ரீதியாக கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 4,193 கோடியை ஈட்டியுள்ளதன் மூலம், பிசிசிஐ-யின் ரொக்கம் மற்றும் இருப்புத் தொகை ரூ. 20,686 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான நிதி அனைத்து விடுவிக்கப்பட்ட பிறகு, பிசிசிஐ-யின் பொதுநிதியானது இரு மடங்காக உயர்ந்துள்ளது. 2019-ல் ரூ. 3,906 கோடியாக இருந்தது 2024-ல் ரூ. 7,988 கோடியாக உயர்ந்துள்ளது.
2019-ல் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்பு, பிசிசிஐ-யின் ரொக்கம் மற்றும் இருப்புத் தொகை ரூ. 6,059 ஆக இருந்தது. இதுவே 2024-ல் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு விடுவிக்கப்பட்ட பிறகு, ரூ. 20,686 ஆக உள்ளது. இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளில் பிசிசிஐ ரூ. 14,627 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 4,193 கோடி அதிகரித்துள்ளது.
ஊடகங்களுக்கான உரிமை மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ. 2,524.8 கோடியிலிருந்து ரூ. 813.14 கோடியாக சரிந்துள்ளது. உள்நாட்டில் குறைந்த அளவிலான சர்வதேச ஆட்டங்கள் நடைபெற்றதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் மூலம் ஈட்டிய வருவாய் மற்றும் ஐசிசி பகிர்ந்தளித்த நிதி மூலம், 2023-24-ல் பிசிசிஐ கூடுதலாக ரூ. 1,623.08 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் ரூ. 1,167.99 கோடி மட்டுமே ஈட்டப்பட்டிருந்தது.
வரும் செப்டம்பர் 28 அன்று பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நடப்பாண்டுக்கான நிதியாக மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ரூ. 2,013.97 கோடி விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டில் ரூ. 1,990.18 கோடி விடுவிக்கப்பட்டது.
BCCI | BCCI Income | BCCI AGM |