இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரியான் பராக் அறிமுகமானார்.
பதும் நிசங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தனர்.
அணியின் ஸ்கோர் வேகமாக உயரவில்லை என்றாலும், விக்கெட்டை இழக்காமல் இருவரும் நிதானமாக விளையாடினார்கள்.
இதன் பிறகு 89 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அக்ஷர் படேல் பிரித்தார்.
பதும் நிசங்கா 65 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதன் பிறகு அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன், குசால் மெண்டிஸ் கூட்டணி அமைத்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த கூட்டணியும் 89 ரன்கள் சேர்த்தது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 102 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து நூலிழையில் சதத்தைத் தவறவிட்டு பராக் பந்தில் வெளியேறினார்.
அடுத்ததாக குசால் மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 82 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணிக்கு அடுத்தடுத்து வேகமாக விக்கெட்டுகள் விழுந்தன.
38 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்த இலங்கை அணியால் 50 ஓவர்கள் முடிவில் 248 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அசலங்கா 10, சமரவிக்ரமா 0, லியானகே 8, வெல்லாலகே 2 ரன்களில் வெளியேறினர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை.
வெல்லாலகேவின் சிறப்பான பந்துவீச்சில் வீழ்ந்தது இந்திய அணி.
ரோஹித் சர்மா 35 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களும் எடுத்தனர்.
மற்றபடி கில் 6, ரிஷப் பந்த் 6, கோலி 20, அக்ஷர் படேல் 2, ஸ்ரேயஸ் ஐயர் 8, பராக் 15, துபே 9 ரன்களில் வேகவேகமாக வெளியேற இந்திய அணி 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அற்புதமாகப் பந்துவீசிய வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது.
மேலும், கடைசியாக 1997-ல் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.