நடுவர்களின் முடிவால் குறையும் ரன்கள்: டேல் ஸ்டெயின் கிண்டல்

நேற்றைய ஆட்டத்தில், நடுவர்கள் பரிசோதனையில் நோர்க்கியாவின் பேட் தேர்ச்சியடையவில்லை. பிறகு, மாற்று பேட் கொண்டு வரப்பட்டன.
நடுவர்களின் முடிவால் குறையும் ரன்கள்: டேல் ஸ்டெயின் கிண்டல்
ANI
1 min read

ஐபிஎல் போட்டியில் கடந்த இரு வருடங்களாக பேட்டர்கள் செலுத்தி வரும் ஆதிக்கத்தால், 300 ரன்கள் எப்போது அடிக்கப்படும் என ரசிகர்களைக் கேள்வியெழுப்பச் செய்துள்ளது. அந்தளவுக்கு பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கின்றன. கடந்தாண்டு 287 ரன்கள் குவிக்கப்பட்டன. நிகழாண்டில் 286 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு மட்டும் 8 முறை 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து சூழல்களும் பேட்டர்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்படத் தொடங்கின.

ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்படுகின்றன. மைதானங்களின் அளவு சுருங்கி வருகின்றன. பேட்டின் தடிமன் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி நிறையப் பட்டியல்கள் போடப்பட்டன.

பேட்டின் அளவு: விதி சொல்வது என்ன?

ஐபிஎல் போட்டியில் விதிப்படி பேட்டின் அகலம் 10.79 செ.மீ.-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பேட்டின் தடிமன் 6.7 செ.மீ.-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பேட்டின் பக்கவாட்டு அகலம் 4 செ.மீ.-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பேட்டின் நீளம் 96.4 செ.மீ.-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கடந்த சில ஆட்டங்களில் பேட்டின் அளவைப் பரிசோதிக்கும் சாதனங்களுடன் தான் நடுவர்கள் களத்துக்குள் வருகிறார்கள். முன்பு, ஓய்வறையிலேயே பேட்டின் அளவுகள் பரிசோதிக்கப்படும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தில்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆட்டங்களிலிருந்து களத்தில் பேட்டின் அளவுகளைப் பரிசோதிக்கும் நடைமுறையை நடுவர்கள் கொண்டு வந்தார்கள். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தின்போது நிதிஷ் ராணாவின் பேட் பரிசோதிக்கப்பட்டது. தில்லிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஹார்திக் பாண்டியாவின் பேட் பரிசோதிக்கப்பட்டது.

பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான நேற்றைய ஆட்டத்தின்போது அன்ரிக் நோர்க்கியாவின் பேட் பரிசோதிக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான நோர்க்கியா 16-வது ஓவரின்போது களமிறங்கினார். நடுவர்கள் பரிசோதனையில் நோர்க்கியாவின் பேட் தேர்ச்சியடையவில்லை. இதன்பிறகு, ஓய்வறையிலிருந்து மாற்று பேட்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், ரஸ்ஸல் ஆட்டமிழந்ததால், நோர்க்கியா கடைசி வரை அந்த பேட்டில் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 111 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 95 ரன்களுக்கு சுருண்டது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தனது எக்ஸ் தளப் பதிவில், பேட்டின் அளவுகளை நடுவர்கள் பரிசோதிக்கத் தொடங்கியதால், அதிகளவில் ரன் குவிக்கப்படுவது குறைந்துவிட்டதாகக் கேலியாகப் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் ஸ்டெயின் பதிவிட்டுள்ளதாவது:

"நடுவர்களிடம் தற்போது புதிய பொருள் (பேட்களின் அளவை அளக்கும் சாதனம்) இருக்கிறது. இதனால், பேட்டர்கள் தங்களுடைய இரண்டாம் நிலை பேட்களுடன் களமிறங்குகிறார்கள். தற்போது ஸ்கோரை பாருங்கள்... ஹாஹா!"

நடப்பு ஐபிஎல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு மொத்தம் 8 இன்னிங்ஸில் ஒரு முறை மட்டுமே 200 ரன்கள் கடக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in