

பிசிசிஐ உத்தரவின்பேரில் அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிஸுர் ரஹ்மானை நீக்குவதாக கொல்கத்தா அணி அறிவித்துள்ளது.
2026 ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் முதல் மே வரை நடைபெறவுள்ளது. அதற்காக வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் நிறைவடைந்து அணிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில், வங்கதேச வீரர் முஸ்தஃபிஸுர் ரஹ்மானை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா அணிக்கு இந்து அமைப்பினர்களால் புதிய பிரச்னை எழுந்தது.
யார் இந்த முஸ்தஃபிஸுர் ரஹ்மான்?
வங்கதேசத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஸுர் ரஹ்மான். இவர், அந்நாட்டு அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் 60 போட்டிகளில் 65 விக்கெட்டுகளை எடுத்தவர். 2016-ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடி அறிமுகமான இவர், 2018-ல் மும்பை இந்தியன்ஸ், 2021-ல் ராஜஸ்தான் ராயல்ஸ், 2022, 2023-ல் தில்லி கேபிடல்ஸ், 2024-ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவரை, இம்முறை ரூ. 9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான போக்கு
இதற்கிடையில் டிசம்பர் 18 அன்று வங்கதேசத்தில் நடந்த மாணவ அமைப்பினரின் வன்முறையில் சிறுபான்மை இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து இளைஞர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவியது. இதற்கிடையில், வங்கதேச வீரரை இந்திய அணியில் இணைத்துக் கொண்டு ஐபிஎல் விளையாடுவதற்கும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
முஸ்தஃபிஸுர் ரஹ்மான் நீக்கம்
இதையடுத்து கொல்கத்தா அணியிலிருந்து முஸ்தஃபிஸுர் ரஹ்மானை நீக்கி, அவருக்கு பதிலாக வேறு வீரரைச் சேர்க்க பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கொல்கத்தா அணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒழுங்குமுறை ஆணையமான பிசிசிஐ வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக முஸ்தஃபிஸுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க அறிவுறுத்தியுள்ளதை உறுதிப்படுத்துகிறோம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில், உரிய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த வெளியீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிமுறைகளுக்கு இணங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற்று வீரரை பிசிசிஐ அனுமதித்துள்ளது. கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜகவினர் வரவேற்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிசிசிஐ அளித்துள்ள உத்தரவை வரவேற்பதாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் சங்கீத் சிங் சோம் தெரிவித்துள்ளார். என்டிடிவி செய்தித் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “சனாதனிகள் மற்றும் இந்துக்களின் மனநிலையை உணர்ந்து நடவடிக்கை எடுத்திருக்கும் பிசிசிஐக்கும் மத்திய அரசுக்கும் நன்றி. இப்படிச் செயல்பட்டால் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இந்துக்கள் மனது புண்படும் என்பதை ஷாருக் கான் இப்போது புரிந்து கொண்டிருப்பார்” என்றார்.
Kolkata Knight Riders have announced that they have replaced Bangladeshi player Mustafizur Rahman from the team on the orders of the BCCI.