
ஆசியக் கோப்பைக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பிரபல வீரரும் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனுமான மெஹிதி ஹசன், ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை.
ஆசியக் கோப்பைப் போட்டி இம்முறை டி20 ஆட்டங்களைக் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபியில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் குரூப் சுற்றில் செப்டம்பர் 14 அன்று மோதுகின்றன. ஆப்கானிஸ்தான், ஹாங் காங், இலங்கை ஆகிய அணிகளுடன் குரூப் பி யில் இடம்பெற்றுள்ளது வங்கதேச அணி.
இப்போட்டிக்கான 16 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வென்ற வங்கதேச அணியில் இடம்பெற்றிருந்த மெஹிதி ஹசன், முஹமது நைமுக்கும் வங்கதேச அணியில் இடம் கிடைக்கவில்லை.
விக்கெட் கீப்பர் பேட்டர் நுருல் ஹசன் மற்றும் ஆல்-ரவுண்டர் சைஃப் ஹசன் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளார்கள். நுருல் ஹசன் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
ஆகஸ்ட் 30 அன்று நெதர்லாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. ஆசியக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதே 16 வீரர்கள் கொண்ட அணியே இந்தத் தொடரிலும் விளையாடுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக மெஹிதி ஹசன் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து, ஆசியக் கோப்பைக்கான அணியிலும் தனது இடத்தை இழந்துள்ளார் மெஹிதி ஹசன். மாற்று வீரராக மட்டுமே மெஹிதி ஹசன் அணியுடன் பயணிக்கிறார்.
ஆசியக் கோப்பை மற்றும் நெதர்லாந்து டி20 தொடருக்கான வங்கதேச அணி
லிட்டன் தாஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தன்ஸித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமேன், சைஃப் ஹசன், தௌஹித் ஹிருதாய், ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன், நுருல் ஹசன், மஹேதி ஹசன், ரிஷத் ஹொசைன், நசும் அஹமது, முஸ்தபிஸுர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன், டஸ்கின் அஹமது, ஷொரிஃபுல் இஸ்லாம், முஹமது சைஃபுதின்.
மாற்று வீரர்கள்
சௌமியா சர்கார், மெஹிதி ஹசன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்.
Asia Cup T20 | Asia Cup Squad | Bangladesh | Team Bangladesh | Mehidy Hassan | Nurul Hassan | Saif Hassan | Mohammad Naim | Netherlands T20I Series