பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் வரலாறு படைத்துள்ளது.
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் இரு ஆட்டங்கள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் கடந்த 21 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தானில் சௌத் ஷகீல், முஹமது ரிஸ்வான் ஆகியோர் சதமடிக்க அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
வங்கதேசத்தில் முஷ்ஃபிகுர் ரஹீம் 191 ரன்கள் விளாச முதல் இன்னிங்ஸில் அந்த அணி 565 ரன்கள் குவித்து 117 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால், வங்கதேசம் புத்துணர்ச்சி பெற்றது.
தொடர்ந்து, பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.
முன்னிலை பெற்றதைப் பயன்படுத்தி வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடைசி நாளில் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் சுழற்பந்துவீச்சில் மிரட்ட பாகிஸ்தான் பேட்டர்கள் தடுமாறினார்கள். முஹமது ரிஸ்வான் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற பேட்டர்கள் அடுத்தடுத்து நடையைக் கட்டியதால் அந்த அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஷகிப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
வங்கதேசத்தின் வெற்றிக்கு 30 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. தொடக்க பேட்டர்கள் ஸாகிர் ஹசன் மற்றும் ஷத்மன் இஸ்லாம் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்கள்.
இதன்மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது வங்கதேசம். இதற்கு முன்பு பாகிஸ்தானும் வங்கதேசமும் 13 டெஸ்டுகளில் விளையாடியுள்ளன. இதில் 12-ல் பாகிஸ்தான் வெற்றி பெற்றது, 1 ஆட்டம் டிரா ஆனது.
சொந்த மண்ணில் தடுமாறி வரும் பாகிஸ்தான் தொடர்ந்து 5-வது தோல்வியைச் சந்தித்துள்ளது. கடைசியாக 2021 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றது. இதன்பிறகு, சொந்த மண்ணில் முதல் வெற்றிக்காக இன்னும் போராடி வருகிறது பாகிஸ்தான்.