பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாறு படைத்துள்ளது வங்கதேச அணி.
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் இரு ஆட்டங்கள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் கடந்த 21 அன்று தொடங்கியது. இதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த ஆகஸ்ட் 30 அன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அயுப் 58 ரன்கள் எடுத்தார். மெஹதி ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் அணி 262 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 26-6 என்ற நிலைமையில் இருந்த வங்கதேச அணியை சரிவிலிருந்து மீட்டார் லிட்டன் தாஸ். அவர் சிறப்பாக விளையாடி 138 ரன்கள் எடுத்தார். குரம் ஷஸாத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 56 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸாகிர் ஹசன் 40 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாறு படைத்துள்ளது வங்கதேச அணி.