
19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக் கோப்பைப் போட்டி இறுதிச் சுற்றில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றது.
19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கடந்த நவம்பர் 29 முதல் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேசம் இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் இந்திய இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
வங்கதேசம், இந்தியா இடையிலான இறுதிச் சுற்று துபாயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் முஹமது அமான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசத்தில், முஹமது ஷிஹார் ஜேம்ஸ் - ரிஸன் ஹோசன் 4-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து கூட்டணி அமைத்தார்கள். இருவரும் முறையே 40 மற்றும் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
பின்வரிசையில் விக்கெட் கீப்பர் ஃபரித் ஹசன் 39 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்தார். இதனால், வங்கதேசம் அணியால் 200 ரன்களை நெருங்க முடிந்தது.
49.1 ஓவர்களில் வங்கதேசம் அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
199 ரன்கள் என்பதால் இந்திய அணி இலக்கை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கதேசப் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்டர்களை திணறடித்தார்கள். எந்தவொரு பேட்டராலும் 30 ரன்களைத் தொட முடியவில்லை.
அதிகபட்சமாக கேப்டன் முஹமது அமான் 26 ரன்கள் எடுத்தார். வெறும் 35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 139 ரன்களுக்குச் சுருண்டது.
59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தை வங்கதேசம் தக்கவைத்துள்ளது.