பந்தைச் சேதப்படுத்தினாரா அஸ்வின்?: மதுரை பேந்தர்ஸ் அணி புகார்

உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு மதுரை பேந்தர்ஸ் அணிக்கு டிஎன்பிஎல் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தைச் சேதப்படுத்தினாரா அஸ்வின்?: மதுரை பேந்தர்ஸ் அணி புகார்
படம்: https://x.com/DindigulDragons
1 min read

டிஎன்பிஎல் போட்டியில் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தைச் சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் அணி புகார் அளித்துள்ளது.

டிஎன்பிஎல் 2025 போட்டியில் ஜூன் 14 அன்று திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பேந்தர்ஸ் அணிகள் சேலத்தில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ஆர் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 12.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் மழையால் தாமதமாகவே தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் அணியினர் பந்தைச் சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் அணி டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளது. ரசாயனம் கலந்த துணியைக் கொண்டு பந்தைத் துடைத்ததாகவும் இதனால் பந்தின் கனம் கூடியதாகவும் மதுரை பேந்தர்ஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரும்பத் திரும்ப எச்சரித்தும் திண்டுக்கல் அணியினர் பந்தைச் சேதப்படுத்தியதாகப் புகார் அளித்துள்ள மதுரை, ரசாயனத்தைக் கொண்டு பந்தைத் துடைத்ததால் பந்து, பேட்டில் படும்போது உலோகத்தின் சப்தம் கேட்டதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு மதுரை பேந்தர்ஸ் அணிக்கு டிஎன்பிஎல் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஎன்பிஎல் தலைமைச் செயல் அலுவலர் பிரசன்னா கண்ணன் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "அவர்கள் புகார் அளித்துள்ளார்கள். அதற்குப் பதிலளித்துள்ளோம். ஆட்டம் நிறைவடைந்து 24 மணி நேரத்துக்குள் புகாரளித்திருக்க வேண்டும். இருந்தபோதிலும், அவர்களுடைய புகாரை ஏற்றுக்கொண்டுள்ளோம். தங்களுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும்பட்சத்தில் சுயாதீன குழு ஒன்றை அமைப்போம். மதுரை சார்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்காவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிஎன்பிஎல் சார்பில் பந்திலுள்ள ஈரத்தைப் போக்க துணிகள் வழங்கப்பட்டிருந்தன. அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பந்து சிக்ஸருக்குச் சென்றாலும் விக்கெட் விழுந்தாலும் ஓவர் நடுவிலும் நடுவர்கள் பந்தைப் பரிசோதிப்பார்கள். ஆட்டத்தின்போது அவர்களுக்கு பந்தில் எந்தப் பிரச்னையும் தென்படவில்லை" என்றார் பிரசன்னா கண்ணன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in