பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்த பாபர் ஆஸம் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த பாபர் ஆஸம் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக பாபர் ஆஸம் மீண்டும் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்நிலையில் பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் ஆஸம் விலகியுள்ளார். இதன் மூலம் கடந்த 12 மாதங்களில் 2-வது முறையாக கேப்டன் பொறுப்பை துறந்துள்ளார் பாபர் ஆஸம்.
பணிச்சுமையைக் கருத்தில் கொண்டும், தனிப்பட்ட முறையில் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் பாபர் ஆஸம்.
பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளார் பாபர் ஆஸம்.