ஒரு இன்னிங்ஸில் 19 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் ஆயுஷ் பதோனி.
தில்லியில் நடைபெற்று வரும் டி20 லீகில் நேற்று சௌத் தில்லி சூப்பர்ஸ்டார்ஸ் - நார்த் தில்லி ஸ்ட்ரைகர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சௌத் தில்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 55 பந்துகளில் 8 பவுண்டரிகள், 19 சிக்ஸர்களுடன் 165 ரன்கள் எடுத்தார். அவருடன் கூட்டணி அமைத்த பிரியான்ஷ் ஆர்யா 50 பந்துகளில் 10 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்தார்.
இருவரும் சேர்ந்து 286 ரன்கள் சேர்த்தனர். இது டி20 வரலாற்றில் ஒரு ஜோடியால் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட ஸ்கோராகும்.
மேலும், ஒரு இன்னிங்ஸில் 19 சிக்ஸர்களை அடித்து டி20 வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் பதோனி. இதற்கு முன்பு கெயில் ஒரு இன்னிங்ஸில் 18 சிக்ஸர்களை அடித்ததே உலக சாதனையாக இருந்தது.
அதேபோல், இந்த ஆட்டத்தில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து பிரியான்ஷ் ஆர்யா அசத்தினார்.
முடிவில் நார்த் தில்லி ஸ்ட்ரைகர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சௌத் தில்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.