சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் ஓய்வு பெற்றுள்ளார்.
உடனடியாக ஆஸ்திரேலிய டி20 அணியில் பயிற்சியாளர் பொறுப்பை மேத்யூ வேட் ஏற்றுள்ளார்.
2011-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20யின் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மேத்யூ வேட். தொடர்ந்து 2012-ல் ஒருநாள் மற்றும் டெஸ்டிலும் அறிமுகமானார்.
ஆஸ்திரேலியாவுக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 ஆட்டங்களில் வேட் விளையாடியுள்ளார். கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியிருக்கிறார்.
2021 டி20 உலகக் கோப்பையில் அணியின் துணை கேப்டன் மற்றும் ஃபினிஷர் பொறுப்பை வேட் ஏற்றிருந்தார். இந்த டி20யின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியர்களால் மறக்க முடியாத இன்னிங்ஸை விளையாடி அந்த அணியை இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையையும் வென்றது.
36 வயது மேத்யூ வேட் கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து பயணத்தின்போது அணியில் இடம்பிடிக்கவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மேத்யூ வேடைத் தேர்வு செய்யவில்லை. கடைசியாக ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார். இதுவே மேத்யூ வேடின் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என கருதப்பட்டது.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வேட் அறிவித்தார். இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக மேத்யூ வேட் அறிவித்துள்ளார். இருந்தபோதிலும், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும், ஆஸ்திரேலிய அணியுடன் தொடர்ந்து பயணிக்கவுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் குழுவுடன் மேத்யூ வேட் இணைகிறார். தொடர்ந்து, ஒருநாள் தொடரின்போதும் வேட் அணியுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு குறித்து மேத்யூ வேட் தெரிவித்துள்ளதாவது:
"கடைசி டி20 உலகக் கோப்பையுடன் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என எனக்குத் தெரியும். ஓய்வு பெறுவது குறித்தும் பயிற்சியாளராவது குறித்தும் ஜார்ஜ் பெய்லி மற்றும் ஆண்ட்ரூ மெக்டொனால்டிடம் கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது பேசி வந்துள்ளேன்.
கடந்த சில ஆண்டுகளாகவே பயிற்சியாளராவது குறித்து திட்டமிட்டு வந்தேன். எனக்கான வாய்ப்பாக எது அமைந்தாலும் அதற்கு நன்றியுடன் இருப்பேன்.
பிபிஎல் மற்றும் அவ்வப்போது டி20 லீக் போட்டிகளிலும் விளையாடுவேன். ஒரு பயிற்சியாளராக என்னை மேம்படுத்திக் கொள்வதில்தான் என்னுடையக் கவனம் உள்ளது" என்றார் மேத்யூ வேட்.