
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
கணுக்கால் காயம் தொடர்பாக ஸ்கேன் செய்யவுள்ளதால், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடுவது இன்னும் உறுதியாகாமல் உள்ளது.
இந்தியாவுடனான பிஜிடி தொடரை கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தத் தொடரில் 5 டெஸ்டுகளிலும் விளையாடிய கம்மின்ஸ் மொத்தம் 167 ஓவர்கள் பந்துவீசி 21.36 சராசரியில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதிக ஓவர்கள் வீசிய ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர் கம்மின்ஸ் தான்.
பிஜிடி தொடரைத் தொடர்ந்து இலங்கைக்குப் பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது மற்றும் கணுக்கால் காயம் காரணமாக இலங்கை தொடரில் கம்மின்ஸ் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில், பிப்ரவரியில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலும் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம் என அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
"பேட் கம்மின்ஸின் ஸ்கேன் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஸ்கேன் முடிவுகள் வந்த பிறகே, காயத்தின் தன்மை குறித்த தகவல்கள் தெரியவரும்" என்றார்.
சாம்பியன்ஸ் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 22 அன்று இங்கிலாந்தை எதிர்கொள்வது. எனவே, கம்மின்ஸின் ஸ்கேன் முடிவுகளைப் பொறுத்தே சாம்பியன்ஸ் கோப்பையில் அவர் பங்கேற்பது உறுதியாகும்.
இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. இதன் பிறகு, பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு மொத்தம் இரு ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே கம்மின்ஸ் விளையாடியுள்ளார்.
இவர் இல்லாத காலத்தில் ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியுள்ளார்கள். இதில் டி20 அணியின் முழுநேர கேப்டனாக உள்ள மிட்செல் மார்ஷ், ஒருநாள் அணியின் துணை கேப்டனாக உள்ளார். பிஜிடி தொடரிலிருந்து மோசமான ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்ட மிட்செல் மார்ஷ், இலங்கை டெஸ்ட் தொடரிலும் சேர்க்கப்படவில்லை. எனினும், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் மிட்செல் மார்ஷ் இடம்பெறுவார் என ஆஸ்திரேலியத் தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
2009-க்கு பிறகு ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லவில்லை.