
கடந்த இருமுறையும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி, இம்முறை தோல்வியடைந்துள்ளது. சிட்னி டெஸ்டில் சரியான திட்டமிடலுடன் விளையாடிய ஆஸ்திரேலியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என வென்றதுடன், டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கும் தகுதியடைந்துள்ளது.
5-வது மற்றும் கடைசி டெஸ்டின் 2-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இன்று 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போலண்ட் 6 விக்கெட்டுகளும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். காயமடைந்திருக்கும் பும்ரா பேட்டிங் மட்டும் செய்ய வந்து டக் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பும்ரா இல்லாததால் மொத்த சுமையும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா மீது விழுந்தது. முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தினார் பிரசித் கிருஷ்ணா. எனினும் ஆஸ்திரேலிய அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது. கவாஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹெட் 34, வெப்ஸ்டர் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஆஸி. அணியை வெற்றி பெறச் செய்தார்கள். தொடரை இழந்ததுடன் டபிள்யுடிசி இறுதிச் சுற்று வாய்ப்பையும் ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது இந்தியா.
சிட்னி டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய போலண்ட், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 32 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா, தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.
ஜுன் மாதம் லார்ட்ஸில் நடைபெறவுள்ள டபிள்யுடிசி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.