மழை: டிராவில் முடிந்த காபா டெஸ்ட்

ஆட்டநாயகன் விருதை டிராவிஸ் ஹெட் வென்றார்.
மழை: டிராவில் முடிந்த காபா டெஸ்ட்
1 min read

ஆஸ்திரேலியா, இந்தியா இடையே காபாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனிலுள்ள காபாவில் நடைபெற்றது. மழையால் பெரும்பாலான ஆட்டம் பாதிக்கப்பட்டாலும், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. இந்திய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்த்திருந்தது.

கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி கூடுதலாக 8 ரன்கள் மட்டுமே சேர்த்து 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆகாஷ் தீப் 31 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

185 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் முனைப்பு காட்டி விக்கெட்டுகளை இழந்தது. பேட்டிங் வரிசையையும் மாற்றி ஸ்டீவ் ஸ்மித்தை கீழே இறக்கியது.

33 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. டிராவிஸ் ஹெட் 17 ரன்களுக்கு சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி வேகமாக ரன்களை எடுத்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் டி20 பாணியில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசினார். இவர் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து பும்ராவிடம் ஆட்டமிழந்தார்.

18 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதன்மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க பேட்டர்கள் யஷஸ்வி ஜெயிஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் உடனடியாகக் களமிறங்கினார்கள். முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். தொடர்ச்சியாக ஸ்டார்க்கிடம் ஆட்டமிழந்து வந்த ஜெயிஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் கிரீஸைவிட்டு வெளியே வந்து ஸ்டார்கை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கினாலும் கரு மேகங்கள் காபாவைச் சூழ்ந்தன. இதனால், ஆட்டம் எந்த நேரத்திலும் தடைபடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

2.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தை நிறுத்தினார்கள் நடுவர்கள். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. முன்கூட்டியே தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டது.

ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கவே இல்லை. மழை கொட்டித் தீர்த்ததால், ஆட்டம் தொடங்குவதற்கான சூழலும் தென்படவில்லை. பிறகு, இரு அணி வீரர்களும் கைக்குலுக்கிக் கொண்டார்கள். ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்டநாயகன் விருதை டிராவிஸ் ஹெட் வென்றார்.

5 டெஸ்ட் கொண்ட பிஜிடி தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மெல்போர்ன் மற்றும் சிட்னியில் கடைசி இரு டெஸ்டுகள் நடைபெறவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in