
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின முதலிரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் காபாவில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அஸ்வின், ஹர்ஷித் ராணாவுக்குப் பதில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே அறிவித்தபடி ஸ்காட் போலண்டுக்குப் பதில் ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார்.
தொடக்க பேட்டர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் நேதன் மெக்ஸ்வீனி களமிறங்கினார்கள். 5.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை இழக்காமல் 19 ரன்கள் எடுத்து நிதானம் காட்டி வந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 13.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்ததால், உணவு இடைவேளை எடுக்கப்பட்டது. மழை ஓயவில்லை. தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது. இதன்பிறகும் மழை ஓயவில்லை.
இறுதியில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் அறிவித்தார்கள். முதல் நாளில் வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. 15 ஓவர்கள் கூட முழுமையாக வீசப்படாததால், மைதானத்துக்கு வந்த ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
முதல் நாளில் இழந்த ஓவர்களை சரிகட்டுவதற்காக மீதமுள்ள நான்கு நாள்களிலும் அரைமணி நேரம் முன்பே ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 5.20-க்கு ஆட்டம் தொடங்கவுள்ளது. குறைந்தபட்சம் 98 ஓவர்கள் வீசப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள நான்கு நாள்களிலும் மழையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பதே வானிலை சார்ந்த தகவல்கள் கூறுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான டெஸ்ட்.