உலக சாதனை படைத்து ஸ்காட்லாந்தை ஊதித் தள்ளிய ஆஸ்திரேலியா!

ஹெட் 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் குவித்தார்.
உலக சாதனை படைத்து ஸ்காட்லாந்தை ஊதித் தள்ளிய ஆஸ்திரேலியா!
ANI
1 min read

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் பவர் பிளே முடிவில் 113 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது அஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று (செப். 4) நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முன்ஸி 28 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் சீன் அப்பாட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. அதிகம் எதிர்பார்த்த ஜேக் ஃபிரேசர் மெக்கெர்க் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இது அவரது முதல் சர்வதேச டி20 ஆட்டமாகும்.

மறுமுனையில் ஹெட் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஸ்டாய்னிஸுடன் (17 பந்துகளில் அரைசதம்) ஹெட்டும் இணைந்தார். அவருடன் கூட்டணி அமைத்த மிட்செல் மார்ஷும் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பவர் பிளே முடிவில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டி20-யில் பவர் பிளேயில் அதிக ரன்கள் குவித்த அணி என்கிற சாதனையை படைத்தது ஆஸ்திரேலியா. முன்னதாக தென்னாப்பிரிக்க அணி 2023-ல் மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக 102 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 62 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட் 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. 2-வது டி20 நாளை (செப். 6) அன்று நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in