
இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவில் சாம் கோன்ஸ்டஸ் 4-வது இளம் ஆஸ்திரேலிய வீரராக டெஸ்டில் அறிமுகமானார். ஹேசில்வுட்டுக்குப் பதில் ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அறிமுக வீரராகக் களமிறங்கிய இளம் சாம் கோன்ஸ்டஸ் அட்டகாசமாக விளையாடி 52 பந்துகளில் அரை சதம் அடித்தார். பும்ராவையே நெருக்கடிக்குள்ளாக்கிய கோன்ஸ்டஸ் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். 2021-க்கு பிறகு டெஸ்டில் பும்ரா ஓவரில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸர் என்ற பெருமைக்குச் சொந்தகாரர் ஆனார் 19 வயது கோன்ஸ்டஸ். அதாவது டெஸ்டில் 4,483 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸரை கொடுத்துள்ளார் பும்ரா.
கவாஜா தனது வழக்கமான நிதான ஆட்டத்தைக் கடைபிடித்து ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில், கோன்ஸ்டஸ் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுஷேன் கவாஜாவுடன் இணைந்து கூட்டணி அமைத்தார்.
பொறுமையாக விளையாடி வந்த கவாஜா 101 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்தக் கூட்டணியும் சிறப்பாக விளையாடி 115 பந்துகளில் 50 ரன்களை கடந்தது. இதையடுத்து, பும்ரா கொண்டுவரப்பட்டார். இவர் வீசிய முதல் பந்தையே மடக்கி அடிக்கப் பார்த்து முன்கூட்டியே பேட்டை விட்டார் கவாஜா. கேஎல் ராகுலிடம் மிக எளிதான கேட்ச். இவர் 57 ரன்கள் எடுத்தார்.
தேநீர் இடைவேளை வரை லபுஷேன் மற்றும் ஸ்மித் நின்று விளையாடினார்கள். 53 ஓவர்களில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.
முதல் நாள் ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் வேகமாக ரன் குவிக்க ஆஸ்திரேலிய பேட்டர்கள் முயற்சித்தார். ஓவருக்கு 6 ரன்கள் என்ற வீதத்தில் விளையாடி வந்தார்கள். லபுஷேன் இந்தத் தொடரில் இரண்டாவது அரைசதத்தைக் கடந்தார். இந்தக் கூட்டணியும் 50 ரன்களைக் கடந்து இந்தியாவுக்கு தலைவலி கொடுத்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தபோது வாஷிங்டன் சுந்தர் சுழலில் மார்னஸ் லபுஷேன் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட் வந்தவுடன் நெருக்கடி கொடுப்பதற்காக பும்ராவை உடனடியாக அறிமுகப்படுத்தினார் ரோஹித் சர்மா. இவரை டக் அவுட் செய்து போல்ட் செய்தார் பும்ரா. அடுத்த ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் விக்கெட்டையும் வீழ்த்தி பும்ரா வழக்கம்போல் அசத்தினார்.
எனினும், ஸ்டீவ் ஸ்மித் களத்தில் நிதானம் காட்டினார். 71 பந்துகளில் அரைசதம் அடித்தார். அலெக்ஸ் கேரி வேகமாக விளையாட வேண்டும் என்கிற முனைப்பில் களமிறங்கி ரன்களைச் சேர்த்தார்.
81 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தை எடுக்கும் வரை மட்டுமே கேரியால் தாக்குப்பிடிக்க முடிந்தது. இவர் 41 பந்துகளில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்ததார்.
எனினும், ஆஸ்திரேலியா 300 ரன்களை கடந்துவிட்டது. இதன்பிறகு, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பேட் கம்மின்ஸ் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.