
இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு டெஸ்டாக நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் குவித்தது. ஹெட் 140 ரன்களும், லபுஷேன் 64 ரன்களும் எடுத்தார்கள். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, பேட்டிங்கில் மீண்டும் தடுமாறியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 128 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் மற்றும் நிதிஷ் ரெட்டி அதிரடி காட்டி அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே வெற்றிக்கு முயற்சிக்கலாம் என்ற பார்வை இருந்தது. ஆனால், ரிஷப் பந்த் கூடுதலாக ஒரு ரன் கூட சேர்க்காமல் முதல் ஓவரிலேயே ஸ்டார்கிடம் வீழ்ந்தார். அடுத்து வந்தவர்களால் 10 ரன்களைக் கூடத் தொட முடியவில்லை. வழக்கம்போல் நிதிஷ் ரெட்டி மட்டும் 42 ரன்கள் சேர்த்து அணியை முன்னிலைப் பெறச் செய்தார்.
175 ரன்களுக்குச் சுருண்ட இந்திய அணி 18 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
19 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர்கள் 3.2 ஓவர்களிலேயே அடைந்தார்கள். 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பகலிரவு டெஸ்டில் அசைக்க முடியாத அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 5 டெஸ்டுகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் காபாவில் டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது.