
இந்தியாவுக்குப் பயணம் செய்யும் ஆஸ்திரேலிய ஏ அணி, அந்நாட்டு தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணி வரும் செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவுக்குப் பயணம் செய்கிறது. லக்னௌவில் இந்தியா ஏ அணிக்கு எதிராக இரு நான்கு நாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கான்பூரில் மூன்று ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதற்கான ஆஸ்திரேலிய ஏ அணியை அந்நாட்டு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. எனினும், இதைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்யப்படவில்லை.
2027 தொடக்கத்தில் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்டுகள் கொண்ட பிஜிடி தொடரில் விளையாடுகிறது. இதை மனதில் வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, 2027-ல் ஆஸ்திரேலியாவின் பேட்டர்கள் வரிசையில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலிய தேர்வுக் குழு இதைக் கவனத்தில் கொண்டுள்ளது. உதாரணத்துக்கு, தொடக்க பேட்டர் உஸ்மான் கவாஜா வரும் டிசம்பரில் 39-வது வயதைப் பூர்த்தி செய்கிறார்.
14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய ஏ அணியில் சாம் கான்ஸ்டஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய மற்றொரு தொடக்க பேட்டரான நேதன் மெக்ஸ்வீனியும் இதில் இடம்பெற்றுள்ளார்.
பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராஃப்ட், மேட் ரென்ஷா, ஜேசன் சங்கா உள்ளிட்டோர் சேர்க்கப்படவில்லை. 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற பிஜிடி டெஸ்ட் தொடரில் விளையாடிய டாட் மர்ஃபி ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை டெஸ்ட் தொடரில் அறிமுகமான கூப்பர் கான்லியும் சேர்க்கப்பட்டுள்ளார்.
நான்கு நாள் ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலியா ஏ அணி
சேவியர் பார்லெட், கூப்பர் கான்லி, ஜேக் எட்வார்ட்ஸ், ஆரோன் ஹார்டி, கேம்பெல் கெல்லாவே, சாம் கான்ஸ்டஸ், நேதன் மெக்ஸ்வீனி, லேன்ஸ் மோரிஸ், டாட் மர்ஃபி, ஃபெர்கஸ் ஓ நீல், ஆலிவர் பீக், ஜாஷ் ஃபிலிப்பி, கோரி ரோக்கிசியோலி, லியம் ஸ்காட்.
ஒருநாள் ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலியா ஏ அணி
கூப்பர் கான்லி, ஹாரி டிக்சன், ஜேக் எட்வார்ட்ஸ், சாம் எலியட், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, மெக்கென்ஸி ஹார்வே, டாட் மர்ஃபி, தன்வீர் சங்கா, லியம் ஸ்காட், லாச்சி ஷா, டாம் ஸ்ட்ரேகெர், வில் சதர்லாண்ட், கேலம் விட்லர்.
Team Australia | Cricket Australia | Sam Konstas | Cooper Connolly | Todd Murphy | Nathan McSweeney | Josh Phillippe | George Bailey