மகளிர் ஆசியக் கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டி ஜூலை 19 அன்று தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்திய அணி நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது இந்திய அணி.
டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஆசியக் கோப்பையில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்துள்ளது.
இந்திய அணி தரப்பில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மகளிர் ஆசியக் கோப்பையில் ஒரு விக்கெட் கீப்பரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் எனும் சாதனையை படைத்தார் ரிச்சா கோஷ்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 47 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கவிஷா 40 ரன்கள் எடுத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி நடப்பு ஆசியக் கோப்பை போட்டியில் 2-வது வெற்றியை பதிவு செய்தது.
இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவது ஏறத்தாழ உறுதியானது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை ஜூலை 23 அன்று எதிர்கொள்கிறது.