17-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதற்காகப் போட்டியில் கலந்துகொள்ளும் 8 அணிகளும் மும்முரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கும். இரு ஆட்டங்கள் மட்டும் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்.
ஆசியக் கோப்பை 2025 இந்தியாவில் தான் நடைபெற வேண்டியது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்தியா பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் இந்தியாவிலும் விளையாட முடியாத நிலைமை நீடிக்கிறது. இதனால் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெறுகிறது.
1984-ல் தொடங்கப்பட்ட ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா தற்போது நடப்பு சாம்பியனாக உள்ளது. 2023 ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் இலங்கையை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. ஆசியக் கோப்பையை இந்தியா 8 முறையும் இலங்கை 6 முறையும் வென்றுள்ளன.
ஆரம்பத்தில் ஒருநாள் போட்டியாகத் தொடங்கப்பட்ட ஆசியக் கோப்பை சமீபகாலமாக உலகக் கோப்பைக்கு ஏற்றாற்போல விளையாடப்பட்டு வருகிறது. இதனால் தான் 2023-ல் ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்ட ஆசியக் கோப்பை தற்போது டி20 போட்டியாக நடைபெறுகிறது.
இந்தமுறை குரூப் ஏ-வில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், யுஏஇ அணிகளும் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகளும் இடம்பெற்றுள்ளன. குரூப் பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும். இதிலிருந்து இரு அணிகள் தேர்வாகி செப்டம்பர் 28-ல் துபாயில் இறுதிச் சுற்றில் விளையாடும். இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால் இரு அணிகளும் மூன்று முறை மோதவும் வாய்ப்புள்ளன. குரூப் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 14-ல் துபையில் மோதவுள்ளன.
இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடமில்லாதது போல பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஸமும் முஹமது ரிஸ்வானும் இடம்பெறவில்லை. இதுவரை எந்தவொரு பெரிய கோப்பையையும் வெல்லாத ஆப்கானிஸ்தான் அணி இம்முறையாவது சாதித்துக் காட்டுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Asia Cup T20 | Asia Cup | Ind v Pak | India vs Pakistan | India v Pakistan | Ind vs Pak | UAE |