
அஸ்வின் யூடியூப் பக்கத்தில் சிஎஸ்கே ஆட்டங்கள் குறித்த முன்னோட்டங்கள் மற்றும் விமர்சனக் காணொளிகள் இனி வெளியிடப்படாது என அவருடைய யூடியூப் பக்கம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 9.75 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவருடன் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹமத் ரூ. 10 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட் பற்றி பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து காணொளிகளை வெளியிடுவது வழக்கம். ஐபிஎல் போட்டி குறித்தும் தொடர்ச்சியாகக் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அஸ்வின் பங்குபெறாத நேரங்களில், அவரால் பங்கெடுக்க முடியாத சூழல்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்குபெற்று கிரிக்கெட் குறித்து அலசி ஆராய்ந்து கருத்துகளை முன்வைப்பார்கள்.
ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு ஆட்டம் குறித்தும் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் தொடர்ச்சியாகக் காணொளிகள் வெளியாகி வருகின்றன. சிஎஸ்கே முன்னாள் வீரர் வித்யூத் மற்றும் பிரபல பயிற்சியாளரும் அனலிஸ்டுமான பிடாக் பிரசன்னா ஆட்டம் பற்றிய தங்களுடையப் பார்வைகளை முன்வைத்து வருகிறார்கள். சஸ்டிகா ராஜேந்திரன் இதைத் தொகுத்து வழங்குகிறார். இருவரும் வெற்றி தோல்விக்கான காரணங்களை அடுக்குகிறார்கள்.
அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டம் குறித்தும் காணொளி வெளியானது. சிஎஸ்கே தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தோல்வியைச் சந்தித்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து வித்யூத் மற்றும் பிடாக் பிரசன்னா விரிவாகப் பேசினார்கள்.
இதில், சிஎஸ்கே செய்த தவறுகள் எனப் பட்டியலிட்ட பிடாக் பிரசன்னா, அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருக்கும்போது ஐபிஎல் ஏலத்தில் நூர் அஹமதைத் தேர்வு செய்தது மூன்றாவது தவறு என்று குறிப்பிட்டுப் பேசினார். இது பெரும் பேசுபொருளானது. அதுவும் தற்போது வரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் நூர் அஹமது தான் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ஏப்ரல் 7-ல் நடைபெறும் ஆர்சிபி - மும்பை ஆட்டத்துக்கு முந்தைய நிலவரப்படி 4 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் நூர் அஹமது.
அஸ்வின் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவருடைய சக வீரரான நூர் அஹமதை விமர்சித்துப் பேசுவதை தனது யூடியூப் பக்கத்திலேயே அனுமதிப்பது எப்படி சரியாக இருக்கும் என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கேள்வியெழுப்பினார்கள். பெரும் விவாதமான நிலையில், சம்பந்தப்பட்ட காணொளியை அஸ்வின் தனது யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கினார்.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த ஃபிளெமிங், "அதைப் பற்றி எதுவும் தெரியாது. அஸ்வினுக்கு ஒரு யூடியூப் சேனல் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. எனவே அதைப் பார்ப்பதில்லை. இக்கேள்வி எனக்குச் சம்பந்தமில்லாதது" என்றார் அவர்.
இந்நிலையில், ஐபிஎல் 2025 போட்டி முடியும் வரை சிஎஸ்கே ஆட்டங்கள் தொடர்புடைய முன்னோட்டங்கள் மற்றும் விமர்சனக் காணொளிகள் எதுவும் இனி வெளியிடப்படாது என அஸ்வின் யூடியூப் பக்கம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஸ்வின் யூடியூப் பக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விருந்தினர்கள் முன்வைக்கும் கருத்துகள் எதுவும் அஸ்வினின் சொந்தக் கருத்துகள் கிடையாது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.