
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஓய்வறையில் சக வீரர்களுடன் பேசிய காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். பிரிஸ்பேனில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேப்டன் ரோஹித் சர்மாவுடன் வந்த அஸ்வின், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் செய்தியாளர்களைச் சந்திக்க வந்தது, செய்தியாளர்களிடம் பேசியது, அங்கிருந்து ஓய்வறைக்கு மீண்டும் திரும்பியது, ஹர்ஷா போக்ளே கட்டியணைத்தது, மேத்யூ ஹேடன் வாழ்த்தியது, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆஸ்திரேலிய வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை வழங்கி கௌரவித்தது, சக வீரர்களிடம் அஸ்வின் கடைசியாக உரையாற்றியது, வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியது என ஓய்வறையில் அஸ்வினின் கடைசி தருணங்களை மிகவும் உணர்வுப்பூர்வமான வகையில் காணொளியாக வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
சக வீரர்களிடம் அஸ்வின் பேசியதாவது:
"எப்படி பேசுவது எனத் தெரியவில்லை. அணியின் சந்திப்புக் கூட்டத்தின்போது பேசுவது எளிது. ஆனால், தற்போது பேசுவது கடினம். நான் பெரிதும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், இது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். இப்போது தான் 2011-12-ல் முதல் ஆஸ்திரேலியப் பயணமாக, இங்கு வந்தது போல உள்ளது.
அப்போது அணி மாறுதலுக்குரிய தருணத்தில் இருந்தது. ராகுல் டிராவிட் விடைபெற்றார். சச்சின் டெண்டுல்கர் விடைபெற்றார். எல்லோருக்கும் ஒரு நேரம் வரும். அதன்படி, இன்று எனக்கான நேரம் இது. என்னுடையக் கிரிக்கெட் பயணத்தை நான் முழுமையாக மகிழ்ச்சியுடன் அனுபவித்துள்ளேன்.
கடந்த நான்கு, ஐந்து வருடங்களில் நிறைய நல்ல உறவுகளையும், நட்பையும் வளர்த்துள்ளேன். சக வீரர்கள் சிலரை விட்டுச் செல்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய உறவை எந்தளவுக்கு மதிக்கிறேன், ஒரு வீரராக எந்தளவுக்கு அவர்களுக்கு மதிப்பளித்திருக்கிறேன் என்பதை உணர்ந்துள்ளேன். எனவே, மிகச் சிறந்த நேரங்களைச் செலவழித்துள்ளேன். நான் விமானத்தில் வீடு திரும்புகிறேன்.
ஆனால், மெல்போர்னில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை நான் பார்த்துக் கொண்டே தான் இருப்பேன். என்னுள் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் வீரர் முடிவைச் சந்தித்திருக்கலாம். ஆனால், என்னுள் இருக்கும் கிரிக்கெட் பிரியனுக்கு முடிவே கிடையாது.
உங்கள் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளையும் நான் எதிர்நோக்கி இருப்பேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
உங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால், ஒரு அலைபேசியின் அழைப்பு தொலைவிலேயே இருப்பேன். மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரோஹித் சர்மாவுக்கு நன்றி. விராட் கோலிக்கு நன்றி. கௌதம் கம்பீருக்கு நன்றி. இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன்" என்றார் அஸ்வின்.