
ஐபிஎல் 2026-ல் தன்னை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் அஸ்வின் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்தார் அஸ்வின். 2016 முதல் 2024 வரை ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடினார். ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலத்தில் சிஎஸ்கேவால் ரூ. 9.75 கோடிக்குத் தேர்வானார் அஸ்வின்.
ஐபிஎல் 2025-ல் 14 ஆட்டங்களில் 9-ல் மட்டுமே அஸ்வின் விளையாடினார். ஐபிஎல் 2009-க்கு பிறகு முதன்முறையாக ஓர் ஐபிஎல் பருவத்தில் 12 ஆட்டங்களுக்கும் குறைவாக விளையாடினார் அஸ்வின். இதில் 9.12 எகானமியில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
ஓர் அணியாக சிஎஸ்கேவுக்கும் கடந்த ஐபிஎல் போட்டி மோசமானதாக அமைந்ததால், அடுத்த ஐபிஎல் போட்டிக்கு முன்பு இதைச் சரி செய்ய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், சிஎஸ்கேவைவிட்டு அஸ்வின் பிரியவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கின்.
ஆனால், சிஎஸ்கே நிர்வாகத்திடம் அஸ்வின் பேசியது தொடர்பாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2026-ல் தன்னை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் அஸ்வின் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தங்களுடைய திட்டத்தில் தான் பொருந்தவில்லையெனில், அணியிலிருந்து விலகுவதில் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2026-க்கு முன் மினி ஏலம் நடைபெறும். வழக்கமாக ஆண்டு இறுதியில் நடைபெறும். மினி ஏலத்துக்கு முன்பே வீரர்கள் தக்கவைக்கப்படுவது, விடுவிக்கப்படுவது குறித்து இறுதி செய்யப்படும். இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பும் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சஞ்சு சாம்சனும் ஏலத்துக்கு முன்பு தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு ராஜஸ்தான் ராயல்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்குக் கூட வரலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Ashwin | Chennai Super Kings | CSK | IPL 2026